×

ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் பழநி சப்கலெக்டரிடம் விவசாய சங்கத்தினர் மனு

பழநி, மார்ச் 6: பழநி அருகே ஆண்டிபட்டியில் நில உச்சவரம்பு சட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்க வேண்டுமென வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் சப்கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
பழநி அருகே ஆண்டிபட்டி, பெரியம்மாபட்டியில் நில உச்சவரம்பு சட்டப்படி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு, நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு பழநி அருகே ஆண்டிபட்டியில் நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் மீட்கப்பட்ட 72 ஏக்கர் ஏக்கர் நிலம் சுமார் 42 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலங்களை விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நில சீர்திருத்த உதவி ஆணையர் விவசாயிகளுக்கான உரிமையை ரத்து செய்தார். இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், அந்நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனை அகற்ற வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் சண்முகம், முன்னாள் நகராட்சித்தலைவர் ராஜமாணிக்கம் உட்பட ஏராளமானோர் குளத்துரோடு ரவுண்டனா முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பழநி சப்கலெக்டர் உமாவிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், அரசால் வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிக்கும் தனியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு மீண்டும் ஏழை விவசாயிகளிடமே வழங்க வேண்டும். உரிய விசாரணையின்றி ரத்து செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் நிலம் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மனுவை பெற்று கொண்ட சப்.கலெக்டர், ஆண்டிபட்டி நிலம் தொடர்பான வழக்கில் அரசு தரப்பையும் இணைக்க உள்ளதாகவும், அரசு நிலத்தை, தனியார் சொந்தம் கொண்டாட அனுமதிக்க முடியாதென்றும் தெரிவித்தார். மேலும் நிலங்களை மீட்டு விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பிறகே விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : Agrarian Association ,lands ,
× RELATED வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம்...