×

கொடைக்கானலில் பிளந்து கிடக்கும் பிரதான சாலைகள் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி உடனே சீரமைக்காவிட்டால் போராட்டம்

கொடைக்கானல், மார்ச் 6: கொடைக்கானலில் பிரதான சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொடைக்கானல் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இவ்வார்டுகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து உள்ளன. குறிப்பாக நாயுடுபுரம் சாலை, பாக்கியபுரம் சாலை, பஸ்நிலைய சாலை மற்றும் ஆனந்தகிரியில் உள்ள சாலைகள் அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதில் நாயுடுபுரம், பாக்கியபுரம் பகுதி சாலைகள் மிக, மிக மோசமான நிலையில் போக்குவரத்திற்கு லாயக்கற்று இருக்கின்றன. இப்பகுதிகள் வழியாகத்தான் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் சென்று வருகின்றனர். இதேபோல் இங்குள்ள குடியிருப்புகள், கோயிலுக்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இந்த சேதமடைந்த சாலைகளால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்களும் தினமும் அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது. இதுகுறித்து நாயுடுபுரத்தை சேர்ந்த சேவியர் கூறுகையில், ‘கொடைக்கானலில் கீழ் குண்டாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குழாய்கள் பதிக்க சாலைகளை தோண்டினர். பின்னர் பணிகள் முடிந்ததும் குழிகளில் மண்ணை மட்டும் போட்டு விட்டு சாலையை சீரமைக்காமல் விட்டு சென்று விட்டனர். இதனால் அனைத்து சாலைகளும் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இதுகுறித்து நகராட்சி ஆணையாளருக்கு பலமுறை மனு செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் மக்கள் பயன்படுத்தாத பல சாலைகளை நகராட்சி சீரமைத்து வருவதாக தெரிகிறது. எங்கள் பகுதி சாலைகளை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

Tags : roads ,public ,Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்