சேவூர் அருகே மின்சாரம் தாக்கிய விவசாயி, 2 குழந்தைகளை காப்பாற்றிய பெயிண்டர்

அவிநாசி,மார்ச்6: அவிநாசி ஒன்றியம் சேவூர் அருகே வேட்டுவபாளையத்தில் விவசாயி மற்றும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பெயிண்டருக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். சேவூரில் வசிப்பவர் பரூக் (42). பெயிண்டர். இவரது தனது நண்பரான வேட்டுவபாளையத்தில் வசித்து வரும் தங்கராஜின் வீட்டிற்கு பெயிண்டிங் செய்து வந்தார். இந்நிலையில் சம்பளம் பெறுவதற்காக தங்கராஜின் தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து வெளியேறிய மின்சாரம் தங்கராஜை தாக்கியது.

இதில் கீழே விழுந்து என்னை காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இதையறியாத தங்கராஜின் 8 வயது மற்றும் 2 வயதிலான இரு குழந்தைகள் தந்தையை நோக்கி சென்றுள்ளனர். விபரீதம் நடப்பதை உணர்ந்த பரூக் சாமர்த்தியமாக 2 குழந்தைகளையும்  அந்த இடத்திலிருந்து அகற்றியதோடு, மின் இணைப்பு உள்ள இடத்திற்கு சென்று இணைப்பையும் உடனடியாக துண்டித்து தங்கராஜின் உயிரை  காப்பாற்றி அவரை உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இது குறித்து பரூக் கூறுகையில், தங்கராஜின் தோட்டத்தில் மசால் புல்கள் காய்ந்து போனதால் அதற்கு தீ வைத்துள்ளனர். அப்போது அருகே கிடந்த மின் கேபிள் ஒயர்கள் தீயில் பட்டு ஒரு சில இடங்களில் கருகியுள்ளது. இதை பார்த்த வேலையாட்கள் தங்கராஜிடம் தெரிவித்து விட்டு மும்முனை மின்சாரம் வரும் மூன்று பீஸ் கட்டைகளை கழற்றி வைத்துச் சென்றுள்ளனர்.  

இதை மறந்த தங்கராஜ் மூன்று பீஸ் கட்டைகளையும் போட்டு பார்த்துள்ளார். அப்போது, ஒரு கட்டையில் பீஸ் போனது. அதை தொடர்ந்து ஒரு பீஸ் கட்டையை மட்டுமே கழற்றி வைத்துவிட்டு, கருகி அறுந்து கிடந்த மின்சார கம்பி என்பதை தெரியாமலேயே தொட்டுள்ளார். அதனால் மின்சார கம்பியில் இருந்து வெளியேறிய மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. நான் சரியான நேரத்தில் வந்ததால், அவரையும், இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடிந்தது.

நான் பெயிண்டிங் தொழில் மட்டுமல்லாது, கராத்தே பயிற்சியாளராகவும் உள்ளேன். இது போன்ற திடீர் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் பதட்டமின்றி, துணிச்சலுடன் செயல்படுவதற்கான பயிற்சியையும் பெற்றிருக்கிறேன். அந்த பயிற்சிதான் தற்போது உதவியுள்ளது என்றார். மின்சார விபத்தில் இருந்து விவசாயியையும், அவரது இரு குழந்தைகளையும் காப்பாற்றிய பாரூக்கிற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories:

>