×

சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சென்னிமலை, மார்ச் 6: சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் உள்ளது சுயம்பு மாரியம்மன் கோயில். ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியில் உள்ள இந்த கோயில், ஏழு கிராம மக்களுக்கு சொந்தமானது. இந்த கோயிலில், கடந்த 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. பின்னர் 26ம் தேதி இரவு கோயிலுக்கு முன் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பூவோடு எடுத்து கோயிலை சுற்றி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், தினமும் காலையில் பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து மாவிளக்கு எடுத்து கோயிலுக்கு வந்தனர். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில், சொக்கநாதபாளையம், எல்லைக்குமாரபாளையம், ராமலிங்கபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மறவபாளையம், திட்டம்பாளையம், செம்மண்குழிப்பாளையம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். நேற்று இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags : Pongal Festival ,Mariamman Temple ,Chokkanadapalayam ,
× RELATED ராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன்...