×

ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் தீயணைப்பு நிலையங்கள்

ஈரோடு, மார்ச் 6:  ஈரோடு மாவட்டத்தில் 8 தீயணைப்பு நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனை சொந்த கட்டிடத்துக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என தீயணைப்பு துறையினர் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, ஆசனூர் உள்ளிட்ட 10 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த சில மாதங்களுக்கு முன் நம்பியூரில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 11 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த தீயணைப்பு நிலையங்களுக்கு தலைமையிடமாக ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஈரோடு தீயணைப்பு நிலையம் உள்ளது. இதில், ஈரோடு, கொடுமுடி, பவானி ஆகிய 3 தீயணைப்பு நிலையங்கள் மட்டும் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மீதமுள்ள 8 தீயணைப்பு நிலையங்கள் வாடகை இடத்திலும், வாடகை கட்டிடத்திலும் செயல்பட்டு வருகிறது. இதனால், தமிழக அரசு மானியக்கோரிக்கையின் போது ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் தீயணைப்பு நிலையங்களை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் (டிஎப்ஓ) புளுகாண்டி கூறியதாவது: மாவட்டத்தில் 11 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஈரோடு, பவானி, கொடுமுடி ஆகிய தீயணைப்பு நிலையங்கள் மட்டும் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்தியூர் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கும், அதேபோல் மீதமுள்ள 7 தீயணைப்பு நிலையங்களும் வாடகை கட்டிடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இதில், ஆசனூர் தீயணைப்பு நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. ஆசனூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தான் தாளவாடிக்கும் சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகை கட்டிடத்தில் இயங்கும் தீயணைப்பு நிலையங்களை சொந்த கட்டிடத்திற்கு மாற்ற நாங்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Fire stations ,building ,district ,Erode ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...