×

திருவண்ணாமலையில் யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை கலெக்டர் ஆய்வு விரைவில் திறக்க நடவடிக்கை

திருவண்ணாமலை, மார்ச் 6: திருவண்ணாமலையில், பக்தர்களின் வசதிக்காக ₹28 கோடி செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை, கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். திருவண்ணாமலை கிரிவலப்பாதை, ஈசான்ய லிங்கம் அருகே ₹28 கோடி செலவில் 123 அறைகளுடன் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டிடம், திறக்கப்படாமல் வீணாகும் நிலை குறித்து, கடந்த மாதம் 23ம் தேதி தினகரன் மக்களின் குரல் பகுதியில் விரிவான செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக, யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பிரமிளா, ஆர்டிஓ தேவி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.யாத்ரி நிவாஸ் கட்டிடம் முழுவதையும் சுற்றிப்பார்த்த கலெக்டர், பணிகளின் தற்போதய நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தங்கும் அறைகளில் கட்டமைப்பு வசதி, மின் வசதி, லிப்ட், ஜெனரேட்டர் ஆகிய வசதிகள் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளதா என விசாரித்தார்.

அதேபோல், யாத்ரி நிவாஸ் கட்டிடம் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், உடனடியாக உணவகம் செயல்படும் நிலையில் உள்ளதா, குடிநீர் வசதியிருக்கிறதா என கேட்டறிந்தார். அதோடு, பக்தர்கள் தங்கும் விடுதிக்கு அருகேயுள்ள குப்பைக் கிடங்கு, மிகப்பெரும் சுகாதார சீர்கேடாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். எனவே, குப்பைக் கிடங்கை அகற்றும் நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரைவில் ஆய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டது.
அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், யாத்ரி நிவாஸ் கட்டிடம் வரும் சித்ரா பவுர்ணமிக்கு முன்பாக திறப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து. தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட மேலாண்மை அலகின் மகளிர் குழுக்கள் மற்றும் சிறு, குறு விவசாயிகள், ஆகியோரின் உற்பத்தி பொருட்களை, நேரடி விற்பனை செய்வதற்கான வாரச்சந்தை, நாளை (7ம் தேதி) முதல் தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஈசான்ய மைதானம் பகுதியில் நடைபெற உள்ளது. அதையொட்டி, வாரச்சந்தை நடைபெறும் இடத்தையும் கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். அப்ேபாது, மகளிர் திட்ட அலுவலர் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Yatra ,building ,Yatri Niwas ,Thiruvannamalai ,
× RELATED மகாராஷ்டிராவில் பிவாண்டி கட்டிடம்...