×

திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ தேர் திருவிழா திரளான பக்தர்கள் தரிசனம்

திருவலம், மார்ச் 6: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் நேற்று பிரமோற்சவ தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். காட்பாடி தாலுகா, திருவலத்தில் தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் தொண்டை நன்னாடில் பாடல் பெற்ற 32 திருத்தலங்களுள் 10வது திருத்தலமாக போற்றப்படுகிறது. மேலும், மகா சிவத்தலமும், நால்வரால் பாடல் பெற்ற விநாயகர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபட்டு பேறுபெற்ற தலமாகவும் விளங்குகிறது. இச்சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, கடந்த மாதம் 28ம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் மாடவீதிகளில் உலா வந்து கோயில் மூலவர் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் அர்ச்சகர்களின் வேதமந்திரங்கள் முழுங்க, மேளதாளத்துடன் பூஜைகள் செய்து பிரமோற்சவ கொடி ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, அன்று முதல் தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் உற்சவமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளின் வழியாக வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், பிரமோற்சவம் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவையொட்டி நேற்று காலை கோயில் மூலவர்களுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு தீபாராதணை நடந்தது. தொடர்ந்து, விநாயகர், சண்டிகேஸ்வரர், சோமாஸ்கந்தர் சமேத உமாபார்வதி ஒரு தேரிலும், தனுமத்யம்பாள் மற்றொரு தேரிலும் அலங்கரிக்கப்பட்டு உற்சவமூர்த்திகள் தேர்களில் வைக்கப்பட்டு வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ என முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து மாடவீதிகளின் வழியாக வலம் வந்து மாலை கோயிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் த.நிர்மலா, ஆய்வாளர் ம.சிவராமகிருஷ்ணன், மேலாளர் நித்தியானந்தம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

Tags : pilgrimage ceremony ,devotees ,Thiruvalam Vilvanadheeswarar Temple ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...