×

வேலூர் மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அரைமணி நேரம் விழிப்புணர்வு வகுப்பு

வேலூர், மார்ச் 6: வேலூர் மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அரைமணி நேரம் விழிப்புணர்வு வகுப்பு, எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டது. தமிழகத்தில் வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அதேபோல் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களில் செல்பவர்கள் சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து விதிமுறை உள்ளது. மேலும் நீதிமன்றமும் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை.

இந்நிலையில் வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று நேஷ்னல் தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், காரில் சீட்பெல்ட் அணியாமல் பயணித்தவர்களை என்று மொத்தம் 692 பேருக்கு அபராதம் விதித்தனர். மேலும் விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அரைமணிநேரம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் பேசியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிர்பலியை விட விபத்து பாதிப்பால் ஏற்படும் உயிர்பலியின் எண்ணிக்கை அதிகம். கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, உடல் முழுவதும் மாஸ்க் அணிகின்றனர்.

இங்கு விபத்தில்லா பயணத்திற்காக தலை கவசம் மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்பதை நினைவில்கொண்டு ஹெல்மெட் வாங்கி, அணிய வேண்டும். உலகளவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளால் 1.3 மில்லியன் பேர் இறக்கின்றனர். கொடூர நோய் தாக்கத்தால் ஏற்படும் உயிர்பலியை விட இது மிக மிக அதிகம். வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கவேண்டும் என்ற எண்ணம் போலீசாருக்கு கிடையாது. வாகனம் ஓட்டிகள் சாலைகளில் வாகனத்தில் செல்வதற்கு முன்னதாக உங்களையே நம்பியுள்ள குடும்பத்தினரை நினைத்து பார்க்க வேண்டும். எனவே வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். இவ்வாறு அவர் ேபசினார்.

வேலூர் நேஷ்னல் தியேட்டர் அருகே உள்ள சிக்னலில், நேற்று ஒரே நாளில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாத வாகன ஓட்டிகள் 692 பேருக்கு ₹69 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது. இதில் எஸ்ஐகள் செல்வம், செல்வராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர். தொடர்ந்து தினமும் வேலூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : Vellore District ,
× RELATED வேலூர் மாவட்டத்தில் இருந்து...