×

காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் மாணவி கழுத்தை அறுத்த வாலிபர் கைது: அமைந்தகரையில் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை அமைந்தகரை முத்துமாரி அம்மன் காலனியை சேர்ந்த தம்பதியின் 13 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். இச்சிறுமி, நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு  திரும்பினாள். பின்னர், வீட்டின் மொட்டை மாடிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றாள்.  சிறிது நேரத்தில் மொட்டை மாடியில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டதால், பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் மாடிக்கு  ஓடிச்சென்றனர். அங்கு ஒரு வாலிபர், மாணவியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயற்சித்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்து தப்பிக்க மாணவி போராடியபோது, கழுத்தில் கத்தி பட்டு ரத்தம் வழிந்தது. பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர்  ஓடிவருவதை பார்த்த அந்த வாலிபர், பக்கத்து மாடி வழியாக தாவி, அங்கிருந்து தப்பி ஓடினார்.
படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே குடியிருப்பின் கீழ்தளத்தில் வசிக்கும் நித்யா (26) என்ற வாலிபர், பள்ளி மாணவியை ஒருதலையாக  காதலித்து வந்திருக்கிறார். பல நாட்களாக மாணவியின் பின்னால் திரிந்து, காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவரது காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை மாணவி வீட்டின் மொட்டை மாடியில்  இருப்பதை அறிந்த நித்யா, அங்கு சென்று தனது காதலை ஏற்கும்படி கூறியிருக்கிறார். அப்போது, அவரது காதலை ஏற்க மறுத்த மாணவி, நித்யாவை கண்டித்து, ‘‘இனிமேல் இப்படி நடந்து கொண்டால், எனது பெற்றோரிடம் கூறிவிடுவேன்,’’ என  எச்சரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நித்யா மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியது தெரியவந்தது.

இந்நிலையில், அதே பகுதியில் தலைமறைவாக இருந்த நித்யாவை நேற்று முன்தினம் நள்ளிரவில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து  வருகின்றனர்.
காதலை ஏற்க மறுத்த மாணவியை வாலிபர் கழுத்தை அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : student ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...