×

திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையோரம் தாழ்வாக உள்ள டிரான்ஸ்பார்மரால் திக்..திக்..: பொதுமக்கள் அச்சம்

திருவொற்றியூர்:திருவொற்றியூரில் டிரான்ஸ்பார்மரை  பாதுகாப்புக்காக அமைக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில் தெரு அருகே எண்ணூர் விரைவு  சாலையோரம்  மின் வாரியத்திற்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து வயர்கள் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.  இந்நிலையில் இந்த  டிரான்ஸ்பார்மர் பல ஆண்டுகளுக்கு போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத காலகட்டத்தில் மண் தரையை ஒட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த இடத்தில் போக்குவரத்தும் மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால்  தரையை  ஒட்டியுள்ள இந்த டிரான்ஸ்பார்மர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

கன்டெய்னர் லாரி மற்றும் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய சர்வீஸ் சாலையை ஒட்டி இந்த ட்ரான்ஸ்பார்மர் இருப்பதால் எதிர்பாராத விதமாக இதன்மீது வாகனங்கள் மோதினால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  அதுமட்டுமின்றி இங்கு சிறுவர்கள் அதிகமாக நடந்து செல்லும் பகுதி என்பதால் அவர்கள் எதிர்பாராத விதமாக இந்த டிரான்ஸ்பார்மரில் கை வைத்து விட்டால் பெரும் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. பொது மக்களுக்கும்,  வாகனங்களுக்கும் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள இந்த டிரான்ஸ்பார்மரை மேலே தூக்கி பாதுகாப்பான முறையில் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘‘டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ள இடத்தில் மழை காலத்தில் மழை தேங்கும். அப்போது அந்த வழியாக செல்லக்கூடிய பொதுமக்களுக்கு மின் கசிவால் பலியாகும் அபாயம் உள்ளது. தற்போது இந்த  பகுதியில் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளது. துப்புரவு  பணியாளர்கள் இங்கு சுத்தம் செய்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, பாதுகாப்பாற்ற முறையில் இருக்கும் இந்த டிரான்ஸ்பார்மரை பாதுகாப்பாக உயரத்தில் தூக்கி அமைக்க  மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Road ,Transformer Thiruvottiyur Nunnur ,
× RELATED சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பரிதாப பலி: 9 பேர் படுகாயம்