×

பொதுப்பணி துறை அதிகாரியைபோல் போலி கையெழுத்து சான்றிதழில் செயல்பட்ட குடிநீர் கம்பெனிக்கு சீல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி, போலி உரிமம் வைத்து செயல்பட்ட குடிநீர் கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 89 குடிநீர் கம்பெனிகள் செயல்படுகின்றன. இதில் பல  தண்ணீர்  கேன் தயாரிக்கும் நிறுவனங்கள் முறையாக அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில் சப் கலெக்டர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும்  போலீசார் போலி குடிநீர் கம்பெனிகளை அதிரடி ஆய்வு செய்தனர்.அதில், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர், கீழ்கதிர்பூர், திம்மசமுத்திரம், பெருநகர், அவளூர் ஆகிய இடங்களில் உள்ள தண்ணீர் கேன் கம்பெனிகளில் முறையான அனுமதியின்றி  பாட்டில் குடிநீர் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் குடிநீர் தயாரிப்பில் முறையான தரப் பரிசோதனைகள் கடைபிடிக்காததும் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து 5 குடிநீர் கம்பெனிகளுக்கும் அதிகாரிகள்  சீல் வைத்தனர். தொடர்ந்து காஞ்சிபுரம் தாசில்தார் பவானி, டெபுடி தாசில்தார் நடராஜன் ஆகியோர் தொடர்ந்து தண்ணீர் கேன் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலை  உட்பட 6 தண்ணீர் கேன் நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர்.

இதில் சிறுகாவேரிப்பாக்கம் எஸ்எஸ் அக்வா குடிநீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் சப் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தபோது, பொதுப்பணித் துறை அனுமதியுடன் நடத்தப்படுவதாக தொழிற்சாலை உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதற்கான ஆவணங்களை சப் கலெக்டர் சரவணன் பெற்று, அதனை, சென்னை தரமணியில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தார்.அப்போது, பொதுப்பணித் துறை தலைமை  பொறியாளரின் கையெழுத்தை போலியாக போட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டு, தண்ணீர் தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தண்ணீர் கம்ெபனி  நடத்துவதற்கு உரிமம் பெற்றதாக வைத்துள்ள சான்றிதழில், போலி கையெழுத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் இதுபோல் எத்தனை தண்ணீர் கம்பெனிகள் முறைகேட்டில் ஈடுபட்டள்ளன அதிகாரிகள் ஆய்வு  செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Drinking Water Company ,Public Works Department ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்