×

செங்கல்பட்டு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே ஷேர் ஆட்டோக்களால் மாணவ,மாணவிகள் அவதி

செங்கல்பட்டு மார்ச் 6:  செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் 7 தனியார் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பகுதியில் காலை, மாலை, நேரங்களில்  மாணவர்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு, சாலையில் இடையூறாக பழைய பஸ் நிலையம் பகுதியிலும், பள்ளி செல்லும் சாலையிலு, பள்ளியின் நுழைவாயில் அருகிலும் ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன். இதனால்,  மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.மாணவ, மாணவிகள் செல்லும் சைக்கிள், பள்ளி உள்ளே கொண்டு சென்று நிறுத்த  முடியவில்லை, டிக்கெட் ஏற்றுவதற்காக போட்டி போட்டு கொண்டு பள்ளி  நுழைவாயிலிலேயே ஷேர் ஆட்டோக்கள் நிறுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் விரைவாக செல்ல முடியவில்லை. குறிப்பாக மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.தற்போது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு நடந்து  வருகிறது. இந்த நேரத்திலும் ஷேர் ஆட்டோக்கள், மாணவர்களுக்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் குறித்த நேரத்தில் தேர்வுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர். ஆசிரியர்களும், மாணவர்களும்,  ெபாதுமக்களும் கடுமையாக பாதிப்படைகின்றனர். மேலும், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் காலை, மாலை நேரங்களில் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பள்ளி நுழைவாயில்கள் மற்றும் சாலையின் நடுவே நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களை  அப்புறப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும், போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர் என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், தினமும் பள்ளிக்கு  காலை 8 மணிக்குள் இருக்க  வேண்டும் என பள்ளி நிர்வாகம், பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், ஷேர் ஆட்டோக்களின் அட்டகாசத்தால், பல்வேறு இடங்களில் இருந்து பஸ்சில் வரும் மாணவ, மாணவிகளும், பெற்றோருடன் பைக்கில்  வருபவர்களும் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை.காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் அதிக பள்ளிகள் இருப்பதால் சாலையோரங்களில் ஷேர் ஆட்டோக்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. திடீரென சாலையின் குறுக்கே  ஆட்டோ வேகமாக வந்து நிற்பதும், திடீரென திரும்புவதும் மாணவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஷேர் ஆட்டோக்களுக்கு, போலீசார்  தடை செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Student ,Share Autos ,Chengalpattu Girls Higher Secondary School ,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...