×

மது அருந்திவிட்டு மனைவியை அடித்ததை தட்டிக் கேட்டதால் மைத்துனரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இருளர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு வசிப்பவர் நாகப்பன். இவருக்கு விஜி (20) என்ற மகனும்,  காமாட்சி (22) என்ற மகளும் உள்ளனர். காமாட்சிக்கு திருமணமாகி, அதே பகுதியில் உள்ள அவரது கணவர் சரத்குமார் (24) வீட்டில் வசிக்கிறார். சரத்குமாருக்கு குடிப்பழக்கும் உள்ளது. இதனால், தினமும் குடித்து விட்டு வந்து காமாட்சியை  அடித்து உதைப்பதாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் விஜி, தனது அக்காவை அடிக்கடி அடிப்பது பற்றி சரத்குமாரிடம் தட்டிக் கேட்பார் என தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து  வந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, வழக்கம்போல் சரத்குமார் குடித்து விட்டு வந்து, காமாட்சியை அடித்து உதைத்துள்ளார். இதையறிந்த விஜி, தனது அக்காவின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டு, தனது வீட்டுக்கு அழைத்து  சென்றார். இதையடுத்து இரவு 9 மணியளவில் விஜி தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த சரத்குமார், மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை விஜியின் முகத்தில் ஊற்றி தீ வைத்துள்ளார்.முகத்தில் தீப்பற்றியதால், அலறி துடித்த விஜி, வீட்டில் இருந்து வெளியே ஓடினார். உடனே சரத்குமார்,  அவரை அவரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, விஜியின் முகத்தில் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யும் நோக்கத்தோடு விஜியின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற  சரத்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : brother-in-law ,
× RELATED விமானங்களில் நடு இருக்கையை காலியாக...