×

மாங்காடு பகுதியில் பஸ் நிலையம் இல்லாததால் சாலையில் காத்துக் கிடக்கும் பயணிகள்

குன்றத்தூர், மார்ச்  6: சென்னை புறநகர் பகுதியான மாங்காட்டில் அரசு பஸ்கள் நின்று செல்லும் வகையில் பஸ் நிலையம் இல்லாததால், பொதுமக்கள் கடும் வெயிலில் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.புகழ்பெற்ற காமாட்சி  அம்மன், சுக்கிரன் பரிகார ஸ்தலமான வெள்ளீஸ்வரர் உள்பட பல்வேறு பழமையான புராதன கோயில்கள் நிறைந்த பகுதியாக மாங்காடு உள்ளது. மாங்காடு பகுதியை சுற்றிலும் அதிகளவில் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் உருவாகியுள்ளன.  பத்திரப்பதிவு அலுவலகமும் செயல்படுகிறது. இப்பகுதி வளர்ந்து வரும் நகர் பகுதியாக மாறியுள்ளது. ஏராளமான மக்கள், மாங்காடு பகுதியில் குடியேறுகின்றனர். இங்கு மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. தினமும் சென்னையின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கோயில்களுக்கும், தங்களது பல்வேறு தேவைகளுக்காகவும் மாங்காடு வந்து செல்கின்றனர்.இங்கிருந்து சென்னை கோயம்பேடு, பிராட்வே, தி.நகர் உள்பட பல பகுதிகளுக்கும் பொதுமக்கள்  தினமும் சென்று வருகின்றனர்.

பொதுமக்களின் தேவையறிந்து மாங்காட்டில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கும் பொதுமக்கள் எளிதில் சென்று வரும் வகையில் மாநகர பஸ்கள் (தஎ 17பி, 53இ, 54எம்) இயக்கப்படுகின்றன.மேலும் பயணிகளின் வசதிக்காக ஏராளமான  மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால், இங்கு இதுவரை பஸ் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் மாங்காட்டில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் குன்றத்தூர்-  குமணன் சாவடி செல்லும் பிரதான சாலையில் மாங்காடு பகுதியில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதையொட்டி, அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக பயணிகள்  சாலையில் நின்று அவசர கதியில் பஸ்சில் ஏறவோ, இறங்கவோ முடியாமல் கீழே விழுந்து காயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

அதிகளவில் பயணிகள் சாலையில் திரண்டு நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. குடிநீர், கழிப்பறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால், பஸ்சில் பயணம் செய்ய வரும் பெண்கள்  மற்றும் முதியோர் கடும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எவ்வித  நடவடிக்கையும் இல்லை. தற்போது மாங்காடு அபார வளர்ச்சியடைந்த போதும், பயணிகள், அரசு பஸ்கள் வந்து செல்லும் வகையில் பஸ் நிலையம் அமைக்கவில்ைல. இதனால் பொதுமக்கள் கடும் வெயிலில், இயற்கை உபாதைகளை கழிக்க  கூட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்  மழைக்காலங்களில் மழையில் நனைந்து கொண்டே பஸ் ஏற வேண்டியுள்ளது. அதே போல் கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நடுரோட்டில் காத்து கிடக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, மாங்காடு  பகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் விரைவில் அமைக்க வேண்டும் என்றனர்.

Tags : Passengers ,road ,Mangadu ,bus station ,
× RELATED ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு: 40 பயணிகள் உயிர் தப்பினர்