×

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கால்வாயில் இருந்து வெளியேறி ஆறாக ஓடும் கழிவுநீர்

கூடுவாஞ்சேரி, மார்ச் 6: வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.சென்னை - திருச்சி  தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையில் முடிவடையும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை 18 கிமீ தூரம் கொண்டது. இச்சாலை ஓரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்  இருவழி சாலையாக இருந்த இச்சாலையை கால்வாய் வசதியுடன் நான்கு வழி சாலையாக ₹40 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது.ஆனால், தரமற்ற முறையில் அமைத்த கால்வாயில், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து கழிவுநீர்  வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், துர்நாற்றம் தாங்க முடியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும்  அபாயமும் உள்ளது.

வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் ஒருபுறமும் மட்டும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற முறையில் கால்வாய் அமைக்கப்பட்டது. இதில் வீடு, ஓட்டல், திருமண மண்டபம், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து இரவு  நேரங்களில் பம்பிங் செய்யப்பட்டு, கால்வாயில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. அதில், பொக்லைன் இயந்திரம், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஏறி இறங்கும்போது, கால்வாயில் ஆங்காங்கே உடைந்துவிட்டது.  இதனால், மழைக்  காலங்களில் மழைநீர் செல்ல முடியாமலும், அதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமலும் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே சாலையில் தேங்கியும், ஆறாகவும் ஓடுகிறது.

இந்த சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள்  துர்நாற்றம் தாங்க முடியாமல் கடும் அவதியடைகின்றனர். மேலும், சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் கழிவுநீரை,  மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் மீது எறிந்துவிட்டு செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் வீண் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை  துறையிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. என ெபாதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : road ,Vandalur-Kelambakkam ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...