×

பீர் பாட்டிலால் வக்கீலை அடித்து கொன்ற 2 இன்ஜினியர்கள் கைது

சென்னை, மார்ச் 6: சென்னை பெரும்பாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், விஜயாபுரம் பிரதான  சாலை, மாம்பாக்கம் பிரதான சாலை சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபம் காம்பவுண்ட் அருகே  தலையில் ரத்த காயங்களுடன்  சுமார் 27  வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அழகு மற்றும் போலீசார்  சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். சடலமாக கிடந்தவரின் சட்டை பாக்கெட்டில்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தற்காலிக உறுப்பினர் அடையாள அட்டை இருந்தது. அதில், திருநெல்வேலியை சேர்ந்த ராகவ் (26) என குறிப்பிட்டு இருந்தது.மேலும், பேன்ட் பாக்கெட்டில் செல்போன்   இருந்தது. அதில்,   கடைசியாக  பேசிய  எண்ணுக்கு   போலீசார் அழைத்தபோது, இறந்து கிடப்பவர் ராகவ் என உறுதியானது. இதையடுத்து போலீசார், சடலத்தை   கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த சில நாட்களுக்கு முன் ராகவ்,   சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர், 4வது தெருவில் வசிக்கும் அரியலூர் உடையார்பாளையத்தை சேர்ந்த கரிகாலன் (23), தென்காசியை  சேர்ந்த ரமணன் (24) ஆகிய நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு வந்தது தெரியவந்தது.இதையடுத்து போலீசார், அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வாலிபர்கள் 2 பேரும் போதையில் இருந்தனர்.  அவர்களை, காவல்    நிலையம் அழைத்து வந்து  விசாரித்தனர்.விசாரணையில், தங்களை சந்திக்க நண்பர் ராகவ் 2 நாட்களுக்கு முன் வந்தார். நேற்று முன்தினம் இரவு 3 பேரும் சேர்ந்து மது அருந்தியபோது, எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர்,  வேங்கைவாசல் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திய போது மீண்டும் ராகவ் எங்களை தாக்கியதால் கோபம் அதிகமாகி,     பீர் பாட்டில் மற்றும் கல்லால் தாக்கினோம்.

பின்னர், வீட்டுக்கு   வந்து விட்டோம் என தெரிவித்ததாக போலீசார் கூறினர். பின்னர் போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரமணன் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக  வேலை பார்க்கிறார். கரிகாலன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags : engineers ,lawyer ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி