×

நீதிமன்ற உத்தரவின் பேரில் மலைப் பகுதியில் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் இடிப்பு

தாம்பரம், மார்ச் 6: குரோம்பேட்டை, துர்காநகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே மலை உச்சியில், தேவாலயம் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கியது. அரசு இடத்தில் உள்ள அந்த தேவாலயத்தை அகற்ற வேண்டும் என  அப்பகுதியை சேர்ந்த 2பேர் கடந்த 2010ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேவாலயத்தை அகற்ற உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். அந்த மனு தள்ளுபடி  செய்யப்பட்டது. பின்னர், தேவாலயத்தை அகற்ற வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.  உடனடியாக தேவாலயத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜனவரி 9ம் தேதி  உத்தரவிட்டது. இது தொடர்பாக பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரன், தேவாலய நிர்வாகிகளிடம் நீதிமன்ற உத்தரவுப்படி தேவாலயம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அகற்ற உத்தரவு வந்துள்ளது என தெரிவித்தார். இதற்கு தேவாலய தரப்பினர்  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தாசில்தார் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள்நேற்று தேவாலயத்தை அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். தாம்பரம் மற்றும் சேலையூர் எஸ்ஐக்கள் அசோகன், சகாதேவன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் கால அவகாசம் வேண்டும் என தேவாலய நிர்வாகத்தினர் கூறினர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மதியம் 3 மணிவரை கால  அவகாசம் கொடுத்தனர். ஆனால் தேவாலயத்தை இடிக்க கூடாது என்ற உத்தரவை தேவாலயம் தரப்பில் ஒப்படைக்கவில்லை. இதை தொடர்ந்து போலீசார், வருவாய்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தேவாலய படிக்கட்டை இடிக்க  முயன்றனர். அதற்கு கிறிஸ்துவர்கள் மற்றும் காஞ்சி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல், ரஞ்சன் உட்பட ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து  மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாஸ்டர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தேவாலயத்தின் உள்ளே இருந்தவர்கள், வெளியே வராமல் கதவை பூட்டி கொண்டனர்.

பின்னர் போலீசார், வருவாய்துறையினர் கதவை உடைத்து அவர்களை வெளியேற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் வாக்குவாத்ததில் ஈடுபட்டவர்களை வெளியேற்றி விட்டு  தேவாலயத்தை இடிக்கும் பணியை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி சென்று அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருவாய்துறையினர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது தொடர்பாக தேவாலய தரப்பினருக்கு முறையாக தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கேட்ட நேரம் வரை அவகாசம் கொடுத்தோம். ஆனால்  அவர்கள் எந்த உத்தரவும் பெறாத நிலையில் அகற்றப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மட்டுமே போலீஸ் பாதுகாப்போடு செய்துள்ளோம் என்றனர்.

Tags : Demolition ,church ,hilltop ,Christian ,
× RELATED திசையன்விளை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி