×

வெங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இடவசதி இல்லாமல் நோயாளிகள் அவதி

ஊத்துக்கோட்டை: வெங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி இல்லாததால் பழைய பள்ளி கட்டிடத்திற்கு உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம்   அருகே வெங்கல் கிராமத்தில்  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பெரியபாளையம்  - தாமரைப்பாக்கம் சாலையின் ஓரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  இயங்கி வருகிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார  நிலையத்தில் வெங்கல்,  வெங்கல் குப்பம், செம்பேடு, பாகல்மேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த வெங்கல் மருத்துவமனை ஒரே ஒரு கட்டிடத்தில்  இயங்கி வருகிறது.இங்கு தற்போது போதுமான வசதியில்லாததால் இடநெருக்கடியாகவும் உள்ளது. சாலையின் ஓரத்திலேயே மருத்துவமனை இயங்குவதால் மருத்துவமனைக்கு வருபவர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளியே உட்காரும்போது  திடீரென குழந்தைகள் விளையாட்டு போக்கில் சாலைக்கு சென்று விடுகிறார்கள். இதனால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.  எனவே இந்த மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வெங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போதுமான இடவசதி இல்லாமல் உள்ளது. அதிக நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தால் சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் நிற்க  வேண்டியுள்ளது.  மேலும் வெங்கலில் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில்   8 வகுப்பறைகளுடன் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. தற்போது இந்த பள்ளி கடந்த 6 வருடத்திற்கு முன்பு அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ள  புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த பழைய பள்ளி கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாததால் பழுந்தடைந்து கிடக்கிறது.  இதனால் இந்த பள்ளி கட்டிடத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாட்டம் போன்ற சமூக விரோத  செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.   எனவே இந்த பாழடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து,  அந்த மருத்துவமனையை  இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிராம சபை தீர்மானம்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் (திமுக)  கூறுகையில்,  ‘‘பாழடைந்த பள்ளி கட்டிடத்திற்கு  அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஆனால்  இதுவரை எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.

Tags : Venkal Primary Health Center ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...