×

₹1 லட்சம் பணம் கேட்டு டிராவல்ஸ் அதிபரை மிரட்டிய ரவுடி உள்ளிட்ட இருவர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூரில் ₹1 லட்சம் பணம் கேட்டு டிராவல்ஸ் அதிபரை மிரட்டிய ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், மேற்கு பானு நகரை சேர்ந்தவர் ஜாய் (38). அம்பத்தூர் டிராவல்ஸ் நிறுவன டிரைவர். இந்த  நிறுவனத்திலிருந்து ஐ.டி கம்பெனிக்கு கார்களை வாடகைக்கு விட்டு ஊழியர்களை பணிக்கு அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 2ம் தேதி ஜாய் டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை எடுத்துக்கொண்டு பணிக்கு சென்றார்.  அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது பிரதான சாலை அருகில் சர்வீஸ் சாலையில் வந்தபோது இவரது காரை 4 பேர் கும்பல் காரை வழிமறித்துள்ளனர்.பின்னர், அவர்களில் ஒருவன் டிரைவர் ஜாயிடம் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ரவிக்கு  போன் போட்டு கொடு என கூறியுள்ளார். அவரும் தனது செல்போனில் இருந்து ரவியை தொடர்பு கொண்டு போனை மர்ம நபரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது மர்ம நபர் போனை வாங்கி ரவியிடம், ‘‘உனக்கு 25 கார்கள் ஐடி நிறுவனத்திற்கு ஓடுகிறது. எனவே எனக்கு ₹1 லட்சம் பணம் தர வேண்டும். கொடுக்காவிட்டால் உனது கார்கள் பெருங்களத்தூர் பகுதிக்கு வர முடியாது’’ என  மிரட்டியுள்ளார்.இதுகுறித்து டிரைவர் ஜாய் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் ரவியை  போனில் பணம் கேட்டு மிரட்டியது பெருங்களத்தூர் சேர்ந்த ரவுடி கஜா தலைமையிலான கும்பல் என தெரியவந்தது. எனவே போலீசார் தனிப்படை அமைத்து கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக  பெருங்களத்தூர், அறிஞர் நகரை சேர்ந்த வேலு என்ற உதயகுமார் (24) என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக  ரவுடி கஜாவை வேறொரு வழக்கில் பீர்க்கங்கரணை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Rowdy ,Travels Chancellor ,
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது