×

அதிமுக நிர்வாகியிடம் கேள்வி கேட்ட குமரி அரசு பஸ் டிரைவர் திடீர் இடமாற்றம் தொமுச உள்ளிருப்பு போராட்டம்; அதிகாரிகள் பேச்சுவார்த்தை

நாகர்கோவில், மார்ச் 6: அதிமுகவினரிடம் கேள்வி கேட்ட டிரைவரை இடமற்றம் செய்ததை கண்டித்து போக்குவரத்து கழக ஊழியர்கள் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று நடத்திய உள்ளிருப்பு போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது. நாகர்கோவில் அருகே சரக்கல்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிட திறப்புவிழா நடந்தது.  இதில் அதிமுக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு வந்த, ராணித்தோட்டம் பணிமனை 3ல் டிரைவராக பணியாற்றும் தொமுச பேரவை துணை தலைவர் பல்குணன் உள்ளூர் எம்எல்ஏவை ஏன் இந்த விழாவுக்கு அழைக்கவில்லை? அழைத்தால் வந்திருப்பாரே என்று  தளவாய்சுந்தரத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் பல்குணனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் பல்குணன் ராணித்தோட்டம் 3வது பணிமனையில் இருந்து குழித்துறை பணிமனை 2க்கு திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகியிடம் கேள்வி கேட்டதால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியும், அவரது இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டும்  தொமுசவினர் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் அலுவலகம் முன்பு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சுரேஷ்ராஜன் எம்எல்ஏ தலைமையில், அரசு போக்குவரத்து கழக வணிக பிரிவு மேலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் திமுக மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ், அரசு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் சிவன்பிள்ளை, தலைவர் பால்ராஜ், பொருளாளர் கனகராஜ், இளைஞரணி சிவராஜ், மாவட்ட தொமுச செயலாளர் ஞானதாஸ், துணை தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கூறியதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் பல்குணன் ராணித்தோட்டம் 3 பணிமனையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் நிர்வாக ரீதியாக எந்த தவறும் செய்யவில்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி நெல்லையில் இருந்து நிர்வாக இயக்குநர் தொடர்பு கொண்டு இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் திரும்ப பெற இருப்பதாகவும், வரும் 11ம் தேதிக்குள் அவரை மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். அவர் அளித்த உறுதியை ஏற்றுக்கொண்டு உள்ளிருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் உறுதியளித்தபடி அவர் மீண்டும் அதே பணியிடத்துக்கு திரும்ப அழைக்க வேண்டும். இல்லையென்றால் திமுக, தொமுசவினர் ஒட்டுமொத்தமாக திரண்டு போராட்டம் நடத்தப்படும் என அதிகாரிகளிடம் தெரிவித்தோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kumari ,government ,transfer ,bus driver ,AIADMK ,executive Negotiations ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...