×

ஹால்மார்க் முத்திரையின்றி நகை வியாபாரம் செய்ய முடியாது கோட்டாறு கருத்தரங்கில் ஐஎஸ்ஐ அதிகாரிகள் தகவல்

நாகர்கோவில், மார்ச் 6: இந்தியா முழுவதும் ஹால்மார்க் முத்திரையின்றி 2021 ஜனவரி 15ம் தேதிக்கு பின்னர் விற்பனை செய்ய முடியாது என இந்திய தர நிர்ணய துணைஇயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.  நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் இந்திய தர நிர்ணயம் அமைவனம் (ஐஎஸ்ஐ) சார்பில், மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஐஎஸ்ஐ மற்றும் ஹால்மார்க் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி தலைமை வகித்தார். ஐஎஸ்ஐ துணைஇயக்குநர் அஜய்கண்ணா மற்றும் செக்ஷன் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் பேசியதாவது: மக்களின் பாதுகாப்பு, தரமற்ற பொருட்களை வாங்கி ஏமாறாமல் இருக்க இந்திய தர நிர்ணயம் செயல்பட்டு வருகிறது. இதன்படி உணவு பொருட்கள், மின் சாதனங்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமான பொருட்களுக்கு தரம் நிர்ணயம் செய்து, இதற்கான சான்றுகளை வழங்குகிறது. போலி ஐஎஸ்ஐ நிறுவன முத்திரைகளுடன் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.

இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. தங்கநகைகளுக்கு 2000ம் ஆண்டு முதல் ஹால்மார்க் முத்திரையை ஐஎஸ்ஐ வழங்கி வருகிறது. தற்போது தானாக முன்வந்து கேட்கும் வியாபாரிகளுக்கு மட்டும், அவர்கள் முத்திரைக்காக வழங்கும் நகைக்கு மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால், வருகிற 2021 ஜனவரி 15ம் தேதிக்கு பின்னர் ஹால்மார்க் முத்திரை பெற்ற நகைகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். மீறி விற்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  ஹால்மார்க் முத்திரை எவ்வளவு சிறிய நகையாக இருந்தாலும், அதில்  பிஐஎஸ், நேர்த்திதன்மை, அஸேயிங் அன்ட் ஹால்மார்க் மைய முத்திரை, நகை விற்பனையாளர் முத்திரை என 4 முத்திரைகள் இருக்கும். இவற்றை கடையில் உள்ள லென்ஸ் மூலம் சோதித்த பின்னரே வாங்க வேண்டும். ஹால்மார்க் முத்திரை பெற ஒரு நகைக்கு ரூ.18 மட்டுமே. எனவே இதற்கு செலவு அதிகம் என கூறினால் மக்கள் நம்பகூடாது. இதில் புகார் இருந்தால், பிஐஎஸ் நிறுவனத்தின் 044 22541442, 22541216 மற்றும் 0422 2210141, 2249016 ஆகிய எண்களிலோ ஆன்லைன் மூலமோ புகார் தரலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  தொடர்ந்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாகர்கோவில் ஹால்மார்க் மையத்தை சேர்ந்த அர்னால்ட் அரசு, ஆர்எம்ஓ நாராயணன், டாக்டர் சுனில்ராய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலி ஐஎஸ்ஐ முத்திரை அறிவது எப்படி?
ஐஎஸ்ஐ முத்திரையின் மேல்பகுதியில் ISI என்ற குறியீட்டிற்கு பின்னர் பொருளின் வகை குறித்த கோட் எண்ணும், கீழே நிறுவனத்தின் அனுமதி எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இருஎண்ணை ஐஎஸ்ஐ இணைய தளத்தில் டைப் செய்தால், அதில் பெயர் வரும். இல்லா விட்டால் போலியாகும். மேலும் ஐஎஸ்ஐ முத்திரை தனியாகவோ அல்லது முத்திரையுடன் வேறு வாசகங்கள் தாங்கியோ விற்பனை செய்யப்படும் பொருட்கள் போலியாகும்.

காரட் மீட்டர் வேஸ்ட்
நகைக்கடைகளில் உள்ள காரட்மீட்டர் நகையின் மேற்புற சுத்தத் தன்மையை (20 மைக்ரான் அளவில் மட்டும்) மட்டுமே தெரிவிக்கும். எனவே அதனை நம்பவேண்டாம்.

கேடிஎம் பெயரில் மோசடி
அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தங்கநகை பற்ற வைக்க கேடிஎம் எனும் காட்மியம்  வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.  இதனை உற்பத்தி செய்யும் நகை தொழிலாளர்கள் புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். எனவே வெளிநாடுகள் போல இந்தியாவிலும் காட்மியம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கேடிஎம் என்பதற்கும் தரத்திற்கும் சம்மந்தம் கிடையாது. ஆனால், சிலர் இதனை தரமான நகை என்று கூறி மோசடி செய்கின்றனர்.
* ஹால்மார்க் முத்திரை பெற தென்னிந்தியாவில் 350ம், தமிழகத்தில் 60ம், குமரியில் 4 மையங்களும் உள்ளன.
* 916 என்பது நகையின் ஆயிரம் பங்கில் தங்கம் 916பங்கு உள்ளது என்பதனை குறிப்பதாகும்.
* முன்பு 5 வகை கேரட் தரத்திற்கு ஹால்மார்க் வழங்கப்பட்டது. தற்போது, 22k916.  18k750 மற்றும் 14k585 என 3 வகையான கேரட் தங்கத்திற்கு மட்டுமே ஹால்மார்க் வழங்கப்படுகிறது.

செல்போன் டிவிக்கு 8
சிமென்ட், மிக்சி, குக்கர், சமையல் சிலிண்டர், வாட்டர் பாட்டில் உள்பட 179 வகையான உயிர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்களுக்கு ஐஎஸ்ஐ தரமுத்திரை கட்டாயம். இல்லாமல் விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் செல்போன், எல்.இ.டி டி.வி, லேப்டாப் என 44 மின்னணு சாதனங்களுக்கும் ஐஎஸ்ஐ அவசியம். இவற்றுக்கு பின்புறம் 8 என  தர நிர்ணய எண் குறிப்பிட்டிருக்கும். ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள 179 மற்றும்ட 44 பொருட்கள் சீனா உள்பட எந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றாலும் ஐஎஸ்ஐ முத்திரை இல்லா விட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags :
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...