×

ஒன்றரை மணிநேர மழைக்கே தாக்குபிடிக்கவில்லை அசம்புரோட்டில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிகால்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலட்சியம்

நாகர்கோவில், மார்ச் 6:  நாகர்கோவிலில் ஒன்றரை மணி நேரம் மழை பெய்த நிலையில் அசம்பு ரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு சாலையோர வடிகால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதே காரணம் என்பது தெரியவந்துள்ளது.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் மழை பெய்ய தொடங்கி மாலை 3.30 மணி வரை பெய்தது. இதனால் நாகர்கோவில் அசம்பு ரோட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வடசேரியில் மேட்டு பகுதிகள், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்து சேர்ந்த வெள்ளம் வடிகாலில் பாய்ந்தோடி நிரம்பி அசம்பு ரோட்டில் வந்து சேர்ந்ததால் அசம்பு ரோடு முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி பலரது இரு சக்கர வாகனங்கள் பழுதானது. சிலர்  வாகனத்துடன் மழை வெள்ளத்தில் விழுந்து எழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு மழைக்காலத்திலும் இது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. பள்ளி கல்லூரி செல்கின்ற மாணவ மாணவியரும் இதனால் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இதற்கு இந்த பகுதியில் உள்ள சாலையோர வடிகால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண் மற்றும் கழிவுகள் நிரம்பி காணப்படுகிறது. புதர்கள் வளர்ந்து, பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய்களை அடைத்த நிலையில் காணப்படுகிறது. இதனை மாநகராட்சி கண்டுகொள்வது இல்லை. கோடைகாலமாக இருந்தாலும், மழைக்காலமாக இருந்தாலும் எப்போதும் கழிவுநீர் பாய்ந்தோடும் நிலையில் உள்ள இதனை பராமரிப்பது இல்லை. இதனால் பல இடங்களிலும் கரை பகுதிகள் உடைந்தும், கற்கள் விழுந்தும் காணப்படுகிது. இதனால் எளிதாக மண் நிரம்பிவிடுகின்ற கால்வாயில் இருந்து சாக்கடை கழிவுகளுடன் மழை நீரும் சேர்ந்து சாலையை ஆக்ரமிக்கின்றன. எனவே அடுத்த மழைக்காலம் தொடங்கும் முன்னர் மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 28.70 அடியாகும். அணைக்கு 543 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 604 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 41.05 அடியாகும். அணைக்கு 40 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 8.82 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 157 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 200 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 8.92 அடியாக நீர்மட்டம் உள்ளது.

பொய்கையில் 19.40 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 44.05 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. முக்கடல் அணையில் 14.7 அடி நீர்மட்டம் உள்ளது. நேற்று காலை வரை கன்னிமாரில் 5.4 மி.மீ மழை பெய்திருந்தது. கொட்டாரம் 6, மயிலாடி 29.2, நாகர்கோவில் 95.2, பெருஞ்சாணி 2.8, புத்தன் அணை 2.4, சிவலோகம் 2, சுருளோடு 7.4, குளச்சல் 7, இரணியல் 53, மாம்பழத்துறையாறு 70, கோழிப்போர்விளை 20, அடையாமடை 17, குருந்தன்கோடு 31.2, முள்ளங்கினாவிளை 6, ஆனைக்கிடங்கு பகுதியில் 82.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.


Tags : Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு