×

பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா மண்டைக்காட்டில் இன்று வலியபடுக்கை பூஜை

குளச்சல், மார்ச் 6:   மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்  மாசிக்கொடை விழா கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன்  தொடங்கி  நடந்து வருகிறது. விழாவின் 5ம் நாளான நேற்று மாலை மணவாளக்குறிச்சி இந்திய அபூர்வ மணல்  ஆலை தொழிலாளர்கள் சார்பில் யானை மீது சந்தனக்குடம் பவனியாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. 6 ம் நாள் கொடையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு  முக்கிய வழிபாடான மகா பூஜை எனப்படும் வலியப்படுக்கை பூஜை நடக்கிறது. இந்த  பூஜையின் போது அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், இனிப்பு  பதார்த்தங்கள் உள்ளிட்டவற்றை அம்மன் முன்பு பெரும் படையலாக படைத்து அம்மனை  வழிபடுவார்கள். மாசிக்கொடையின் 6 ம் நாளன்றும், மீனபரணி  கொடையன்றும், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும்  வருடத்திற்கு 3 முறை மட்டும் இந்த வலியபடுக்கை பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது  முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. வலியப்படுக்கையை  முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம்,  6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில்  எழுந்தருளல் நடக்கிறது.

அதைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு  பருத்திவிளை இந்து சமுதாய பேரவை சார்பில் யானை மீது சந்தனக்குடம் பவனி, 1  மணிக்கு உச்சபூஜை, மாலை 6.15 மணிக்கு குளச்சல் கணேசபுரம் பிள்ளையார்  கோயிலிலிருந்து  யானை மீது சந்தனக்குடம் பவனி புறப்பட்டு திருக்கோயில்  வந்தடைதல், 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரத்துடன் சாயரட்சை தீபாராதனை, 9  மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. பின்னர் 9.30 மணிக்கு அம்மன்  வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிமுதல் 1 மணிக்குள்  வலியப்படுக்கை பூஜை ஆகியவை நடக்கிறது. பக்தர்கள் நள்ளிரவுவரை காத்திருந்து  வலியப்படுக்கை பூஜையில் கலந்து கொள்கின்றனர். மாசிக் கொடையின்  மற்றொரு  முக்கிய வழிபாடான  பெரிய சக்கர தீவெட்டி பவனி வரும் 9ம் தேதி இரவு 9.30  மணிக்கு  நடக்கிறது. 10 ம் நாள் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு  பூஜையுடன் கொடைவிழா நிறைவடைகிறது.

Tags : Bhagavadhyayamman Temple The Valayapadakai Pooja ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை:...