×

விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றம் விளவங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் செயலாளர் கைது

களியக்காவிளை, மார்ச் 6: அதிமுக முன்னாள் தொகுதி செயலாளர் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த உதயகுமார் கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கோழிவிளை, ஏலூர்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயிலானி. கூலி தொழிலாளி. இவர் மீது கஞ்சா கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பாறசாலை, நெய்யாற்றின்கரை காவல்நிலையங்களில் உள்ளது. கடந்த 8.8.2019 அன்று இரவு 8.30 மணியளவில் ஜெயிலானி தனது பைக்கில் மார்த்தாண்டம் சென்றுகொண்டிருந்தார். நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையில் படந்தாலுமூடு சேக்ரட்ஹார்ட் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று ஜெயிலானி சென்ற பைக் மீது  மோதியது. இதில் ஜெயிலானி பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அப்போது நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்றுகொண்டிருந்த செங்கவிளை, பனங்காலையை சேர்ந்த ராஜன் என்பவர் ஓட்டி சென்ற லாரி ஜெயிலானி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயிலானி பலியானார். பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் ஜனீப்(25) அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் விபத்து என வழக்குபதிவு செய்தனர்.

போலீசார் லாரி ஒட்டுநர் ராஜன்(60) மற்றும் கார் டிரைவர் என்று மட்டும் அப்போது இருவர் மீது வழக்குபதிவு செய்திருந்தனர். அந்த கார் களியக்காவிளை முன்னாள் பேரூராட்சி தலைவர் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த ஆஷா டயானா என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவரது கணவர் விளவங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் செயலாளர் உதயகுமார்தான் அன்று காரை ஓட்டி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் அது தொடர்பாக விபரங்களை பதிவு செய்யாமல் அப்போது மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் போலீசாருக்கு இந்த விபத்து தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. அதன்படி தனிப்படை போலீசார்  இந்த வழக்கை மறு விசாரணை நடத்தினர். பலரது வாக்குமூலங்கள் பெறப்பட்டது. இதில் நடந்தது, விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்தது. இந்தநிலையில் விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் விளவங்கோடு தொகுதி அதிமுக முன்னாள் செயலாளர் உதயகுமாரை தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நேற்று  கைது செய்தனர். உதயகுமார் மீது களியக்காவிளை உள்ளிட்ட காவல்நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: படந்தாலுமூட்டில் நடைபெற்ற இந்த விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அன்று காரை ஓட்டி வந்த உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பர்களாக இருந்த ஜெயிலானிக்கும், உதயகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்து காரால் உதயகுமார் மோதியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்தபோது லாரி மோதி ஜெயிலானி இறந்தார். திட்டமிட்டு காரால் மோதியதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். உதயகுமார் விளவங்கோடு தொகுதி அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தநிலையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்டோருடன் சேர்ந்து டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். பின்னர் பச்சைமால் உள்ளிட்டோர் அதிமுகவில் மீண்டும் இணைந்த நிலையில் உதயகுமார் கட்சியில் தீவிர ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார்.

Tags : constituency ,Vidarbha ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...