×

அத்திமரப்பட்டியில் பூங்கா வசதியின்றி நடைபயிற்சியாளர்கள் கடும் அவதி

ஸ்பிக்நகர், மார்ச் 6:  அத்திமரப்பட்டியில் பூங்கா வசதியின்றி கடுமையாக அவதிப்படும் நடைபயிற்சியாளர்கள் விரைவில் அமைத்துத்தரப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  தூத்துக்குடி மாநகரில் அதிவேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக ஸ்பிக்நகரும், அதன் சுற்றுவட்டார பகுதிகளும் திகழ்கின்றன. அத்திமரப்பட்டி மற்றும் முத்தையாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அத்திமரப்பட்டி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளத்தின் 24 மதகுகள் நிறைந்த பகுதி மிகச்சிறந்த பொழுதுபோக்கு தலமாக விளங்கியது. தீபாவளி, பொங்கல் பண்டிகை, காணும் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விடுமுறை நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இங்கு வந்து ஆர்வமுடன் கண்டுகளித்து பொழுதுபோக்கினர். இதனிடையே மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் உள்ள பொழுதுபோக்கு தலங்களுக்கு அருகே சிறுவர்களுக்கான பூங்காக்கள் அமைக்கப்பட்ட போதும், அத்திமரப்பட்டியில் அத்தகைய பூங்கா வசதி செய்துதரப்படவில்லை.

 இதனால் நாளடைவில் இப்பகுதிக்கு வருவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அத்திரப்பட்டி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்துவரும் நிலையில் பொழுதுபோக்க ஒரு பூங்கா கூட இல்லாதது மிகவும் வேதனை தருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கோ, இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கோ, வயதானோர் நடைபயிற்சி மேற்கொள்ள ஓய்வுஎடுப்பதற்கோ பூங்கா வசதியின்றி கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி விரைவில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பொழுதுபூங்காவை அத்திமரப்பட்டியில் அமைத்து தர முன்வருவார்களா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Attimarapatti ,park facilities ,
× RELATED அத்திமரப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம்