×

சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் செடிகள் விநியோகம்

கடலூர், மார்ச் 5: சுற்றுச்சூழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் தோட்டக்கலை செடிகளை வினியோகம் செய்ய மாவட்ட தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்குவதுடன் தூய்மைப்படுத்துகின்றன. மரங்கள் சுற்றுச்சூழலில் உள்ள கார்பன் டையாக்சைடு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவை கணிசமாக குறைப்பதுடன் மனிதர்களுக்கும், இதர உயிரினங்களுக்கும் தேவையான ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. சமீபகாலமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது அத்தினத்தின் சிறப்பை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச் செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த நடவு செடிகள், பழ செடிகளை தரமானதாகவும் குறைந்த விலையிலும் வழங்கி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் மற்றும் நெய்வேலியில் அரசு தோட்டக்கலை பண்ணை இயங்கி வருகிறது.  இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மற்றும் விருத்தாசலம் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் இதுவரை இந்த ஆண்டு மட்டும் 7 ஆயிரம் மரக்கன்றுகள், பழக் கன்றுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. எனவே செடிகள் பெற விரும்பும் பொதுமக்கள் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை நேரடியாக அணுகி அல்லது தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை இத்திட்டத்தின்கீழ் அணுகி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Tags : plants ,festivals ,events ,
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...