×

நகை அடகு கடைக்காரரை கத்தியால் வெட்டி 15 பவுன் நகை பறிப்பு

விழுப்புரம், மார்ச் 5:   விழுப்புரத்தில் நகை அடகு கடைக்காரரை கத்தியால் வெட்டி, 15 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  விழுப்புரம் நாராயணன்நகரை சேர்ந்தவர் கவுதம். இவர் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த நத்தாமூர் பகுதியில் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் கடையை பூட்டி விட்டு, கடையில் அடகு வைக்கப்பட்ட நகையை எடுத்துக்கொண்டு பைக்கில் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு அடகு வைக்கப்பட்ட 15 பவுன் நகையை எடுத்துக்கொண்டு, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். எல்லீஸ்சத்திரம் சாலை என்ற இடத்தில் வந்த போது, அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்மநபர்கள் அவரை வழிமறித்தனர். கவுதம் நீங்கள் யார், எதற்கு என் பைக்கை நிறுத்துனீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி நீ வைத்துள்ள நகையை எங்களிடம் கொடு இல்லாவிட்டால் கத்தியால் குத்தி விடுவோம் என மிரட்டினர். ஆனால், கவுதம் நகையை கொடுக்க முடியாது என மறுத்துள்ளார்.  

 இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் கவுதமை வெட்டினர். பின்னர் அவர் வைத்திருந்த நகையை பறித்துக்கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் கத்திவெட்டில் காயமடைந்த கவுதமை மீட்டு, விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும். தினமும் கவுதம் நகையை எடுத்து வந்து செல்வதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியிருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  


Tags :
× RELATED ஈரோடு மாவட்டம் கோபி அருகே கட்டிடத்...