×

பெரியார் பல்கலையின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் நீக்கம்

ஓமலூர், மார்ச் 5:  பெரியார் பல்கலைக்கழகத்தின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்கி வருகிறது. மேலும், இப்பல்கலைக்கழகத்தில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைந்துள்ளன. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து பல்கலைக்கழகத்தின் பெயர் பலகைகளும், தமிழில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்னொளியில் ஜொலிக்கும் தமிழ் வாழ்க என்ற பலகையும், மையக் கட்டிடத்தின் மேல் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் என்று தமிழிலும், அதற்கு கீழே ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழில் இருந்த பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலத்தில் உள்ள பெயர் மட்டும் பளிச் என உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ் மொழியை அவமதிக்கும் வகையில் தமிழில் இருந்த பெயர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. எனவே, உடனடியாக தமிழில் பெயர் பலகையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Characters ,Periyar University ,Name Board ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு