×

பெங்களூர்- ஓசூர் இடையே மெட்ரோ ரயில்

கிருஷ்ணகிரி, மார்ச் 5: பெங்களூரிலிருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் இடக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கிருஷ்ணகிரியில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. எண்ணேகொல் அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுறம் புதிய கால்வாய் அமைக்க, ₹272 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன், இப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். தென்பெண்ணை ஆற்றில் இருந்து உபரி நீர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பிட ₹67 கோடி மதிப்பில் ஆழியாளம் கால்வாய் திட்டமும், ₹80 கோடி மதிப்பில் 33 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டமும் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி நகராட்சியில் 5 தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் பகுதியில் விபத்தை குறைக்கும் வகையில், ₹5 கோடி மதிப்பில் மைய தடுப்பு மற்றும் விளக்குகள் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சின்ன ஏரியில் ₹3.37 கோடி மதிப்பில் நடைபாதை, பூங்கா, மின்விளக்குகள் அமைத்து, நிலத்தடி நீரை சேமித்து, சுற்று சூழல் பாதுகாக்கப்படும். புதிய மருத்துவக் கல்லூரி அருகே உள்ள போலுப்பள்ளியில் ₹72 லட்சம் மதிப்பில் புதிய வனக்களஞ்சியம் அமைக்கப்படும். ஓசூர் கால்நடை மருத்துவமனையை ₹2.50 கோடி மதிப்பில் பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தொன்னையான்கொட்டாய் என்னுமிடத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் ₹14.7 கோடி மதிப்பில் கீழ் பாலமும், பர்கூர் அடுத்த அங்கிநாயனப்பள்ளியில் விபத்துகளை தடுக்கும் வகையில் ₹1.35 லட்சம் மதிப்பில் உயர் மட்ட சாலை மேம்பாலம் அமைக்கப்படும். பெங்களூரில் இருந்து மாநில எல்லையில் அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் செயல்படுத்தப்படும். இந்த மெட்ரோ ரயில் திட்டம் ஓசூர் நகரம் வரை நீட்டிப்பு செய்ய அரசின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Tags : Bangalore ,Hosur ,
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை