×

மெஞ்ஞானபுரத்தில் இடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் கட்டப்படாத பயணிகள் நிழற்குடை

உடன்குடி, மார்ச் 5: மெஞ்ஞானபுரத்தில் இடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் பயணிகள் நிழற்குடை மீண்டும் கட்டப்படாததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மெஞ்ஞானபுரத்தில் நாகர்கோவில் ரோடு   பஸ் நிறுத்தம், திருநெல்வேலி ரோடு பஸ் நிறுத்தம், கல்விளை ரோடு பஸ் நிறுத்தம் என 3 இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் இருந்தன. இதில் நாகர்கோவில் ரோடு,   கல்விளை ரோடு என 2 இடங்களிலும்  கான்கீரிட் கட்டிடங்கள் இருந்தன. நெல்லை ரோட்டில் இரும்பினால் ஆன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்   கடந்த 2014ம் ஆண்டு மெஞ்ஞானபுரம் பஜாரில் சாலை விரிவாக்க பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி இந்த 3 பயணிகள் நிழற்குடைகளையும் நெடுஞ்சாலை துறையினர் இடித்து தள்ளினர். ஆனால் இதுவரை சாலை விரிவாக்க பணிகளும்   நடைபெறவில்லை. மேலும் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைக்கு பதிலாக புதிய பஸ் நிறுத்தம் ஏதும் கட்டப்படவில்லை.  இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பேருந்துக்காக மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பொதுமக்கள், முதியோர், நோயாளிகள் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை விரைவில் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Travelers ,Manganapuram ,
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை