×

உடன்குடி அருகே பாதயாத்திரை பக்தர்களை தாக்கி பணம், செல்போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை

உடன்குடி, மார்ச் 5: உடன்குடி அருகே பாதயாத்திரை பக்தர்களை தாக்கி பணம், செல்போன் பறித்துச்  சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 28ம்தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவை காண நெல்லை, தூத்துக்குடி,  தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து இரவு, பகலாக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுககு வந்த வண்ணம் உள்ளனர். நெல்லை  மாவட்ட பக்தர்கள் ஆழ்வார்திருநகரி, குரும்பூர் வழியாகவும்,  தூத்துக்குடி பக்தர்கள் ஆத்தூர், ஆறுமுகநேரி வழியாகவும்,  நாகர்கோவில் பக்தர்கள் வள்ளியூர், சாத்தான்குளம்,  மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி வழியாக வருகின்றனர். இதே போல் அஞ்சுகிராமம் பக்தர்கள் திசையன்விளை, உடன்குடி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு வழியாகவும்  வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில், திசையன்விளை  வழியாக வந்த பக்தர்கள் உடன்குடி தேரியூர் பகுதியில் மின்வாரிய அலுவலகம்  காட்டுப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னே ஆணும்,  பெண்ணும் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது பைக்கில் வந்த மர்ம  நபர்கள், இவர்களை தாக்கியதோடு இவர்களிடம் இருந்து பணம், செல்போனை  பறித்துச் சென்றனர். அப்போது அவர்கள் கூச்சலிடவே அருகில் நடந்து வந்து,  சென்று கொண்டிருந்தவர்கள் பிடிக்க முயலும் போது செல்போனை மட்டும் விட்டு,  விட்டு பைக்கில் தப்பியோடினர். இச்சம்பவம் பாதயாத்திரை  பக்தர்களிடையே பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.  எனவே, போலீசார் இரவு நேர ரோந்து பணியை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED மது விற்ற 2 பேர் கைது