×

மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழுவில் உள்குத்து துணைத்தலைவர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு தாரமங்கலத்திலும் நடக்காததால் பொதுமக்கள் அதிருப்தி

மேச்சேரி, மார்ச் 5: மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்கலத்திலும் தேர்தல் நடத்த அதிமுகவினர் ஒத்துழைக்காததால் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர். மேச்சேரி ஊராட்சி ஒன்றிய தேர்தலில் அதிமுக  7, பாமக  4, திமுக 1 மற்றும் சுயேச்சைகள் 3 பேர்  என மொத்தம் 15  ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், அதிமுகவைச் சேர்ந்த தனலட்சுமி ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் தேர்தலின்போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஒருவர்கூட கலந்து கொள்ளாததால் ஒத்திவைக்கப்பட்டது. 2வது முறையாக நடைபெற்ற தேர்தலிலும் ஒரு உறுப்பினர்கள் கூட கலந்து கொள்ளாததால் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 3வது முறையாக நேற்று ஒன்றியக்குழு அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறும் என 15 ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மதியம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முருகன் வெள்ளைகாமு, துணைப்பதிவாளர்(பொது வினியோகத் திட்டம்) மாலினி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். இதில், பாமகவைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து, அக்கட்சியியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். ஆனால், தேர்தலில் வாக்களிப்பதற்காக பாமகவை சேர்ந்த 4 பேர் மற்றும் சுயேச்சை ஒருவர் என 5 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

கூட்டணிக் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த 7 கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததால் பாமகவைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கடைசி வரையிலும் அவர்கள் வரவில்லை. வாக்களிப்பு நடத்த 8 ஒன்றியக்குழு உறுப்பினர் தேவைப்படும் நிலையில் பாமகவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் சுயேச்சை ஒருவர் என 5 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் போதிய கோரம் இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். அதிமுக தேர்தல் ஒப்பந்தப்படி பாமகவைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் உள்குத்து காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் பாமகவினர் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். போதிய உறுப்பினர்கள் வராததால், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஓட்டு போட்டு உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாரமங்கலம்: தாரமங்கலம் ஒன்றியக்குழுவில் மொத்தம் 13 உறுப்பினர்கள் உள்ளனர். திமுக 4, பாமக 4, அதிமுக 2, தேமுதிக 1, சுயேட்சைகள் 2 என வெற்றி பெற்றனர். ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு அதிமுக மற்றும் சுயேச்சை ஆதரவுடன் பாமக உறுப்பினர் சுமதியும், திமுக, தேமுதிக ஆதரவுடன் சுயேச்சை உறுப்பினர் லட்சுமியும் போட்டியிட்டனர். இதில், சுமதி 7 வாக்குகள் பெற்று ஒன்றியக்குழு தலைவர் பதவியை ஏற்றார். துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக தரப்பில் 6 பேர் மட்டுமே கலந்துகொண்டதால் போதிய உறுப்பினர்கள் இல்லை என்று கூறி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று மீண்டும் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திமுக உறுப்பினர்கள் 3 பேர் மட்டும் கடைசி நேரத்தில் வந்து கலந்து கொண்டனர். மற்ற உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. இதனால், போதிய கோரம் இல்லாததாக கூறி மீண்டும் தேர்தலை ஒத்திவைப்பாதக தேர்தல் நடத்தும் அலுவலரான ஊராட்சிகள் உதவி இயக்குனர் கோபிநாத் அறிவித்தார்.

இதுகுறித்து திமுக உறுப்பினர்கள் கூறுகையில், திமுக வெற்றியை தடுப்பதற்காக அதிமுகவினர் தேர்தலில் பங்கேற்காமல், தொடர்ந்து ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்போது தேர்தல் வைத்தாலும் திமுக தான் வெற்றிபெறும் என்பது உறுதி என்றனர். இளம்பிள்ளை: வீரபாண்டி ஒன்றியம், கல்பாரப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு  வாக்கெடுப்பு 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று 3வது முறையாக மீண்டும் நடைபெற்றது. இதில், 9 வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் 2வது வார்டு உறுப்பினர் மணி மற்றும் திமுக சார்பில் 4வது வார்டு உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதில் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பின்னர், அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்த மணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் திருவேரங்கன் அறிவித்தார். இதுகறித்த தகவலை நோட்டீஸ் போர்டில் ஒட்டாமல், ஊராட்சி அலுவலகத்தினை பூட்டிவிட்டு அவசர அவசரமாக சென்றதால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து, பிடிஓ சென்ற காரை மறித்து,  வெங்கடாசலம் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தேர்தலையொட்டி, ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags : election ,vice president ,panchayat union ,Mechari ,Taramangalam ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...