×

ஓசூர் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு மீட்பு

ஓசூர், மார்ச் 5: ஓசூர் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பை, கிராம மக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஓசூர் அடுத்த திப்பாளம் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவம்மா(60). செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று வழக்கம் போல், தனது 20 ஆடுகளை திப்பாளம் கிராம பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது திடீரென ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு சென்று பார்த்தார். அப்போது, ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு ஒன்று விழுங்க முயன்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், 10 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை பிடித்து, ஓசூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘திப்பாளம் கிராமத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆடுகளை மலைப்பாம்புகள் விழுங்கியுள்ளது. சஞ்சீவம்மாவின் 3 ஆடுகளை மலைப்பாம்பு விழுங்கியுள்ளது. எனவே, மலைப்பாம்புகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Hosur ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்