×

சுரண்டை பகுதியில் 2 நாள் இடியுடன் மழை நெல் அறுவடை பணிகள் பாதிப்பு

சுரண்டை, மார்ச் 5:  சுரண்டை பகுதியில் வெப்ப சலனத்தால் கடந்த இரண்டு நாட்களாக திடீரென மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பயிர்கள் விளைந்த நிலத்தில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சுரண்டை சுற்றுவட்டார பகுதியில் கடந்த பத்து நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக உஷ்ணம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சாரல் மழை பெய்தது. நேற்றும் மாலையில் ஒரு மணி நேரம் வெப்ப சலனத்தால் மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் நெல் பயிரிட்டிருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியது. அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்தனர். நெல் அறுவடை இயந்திரம் வைத்திருப்போர் முன்பு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1800 வரை வசூல் செய்த நிலையில் மழை பெய்து நிலம் ஈரமாக இருப்பதால் வாடகையை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 வரை அதிகரித்துள்ளனர். இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே நெல்லுக்கு போதிய விலை இல்லாததால் கஷ்டத்தில் இருந்த விவசாயிகளுக்கு கடந்த 2 நாட்களாக பெய்த மழை மேலும் கஷ்டத்தை கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது வீரசிகாமணி பெரியகுளத்து பாசன விவசாயிகள் நெல் உலர் களம் இல்லாததால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். நெல்  உலர் களம் இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பெரியகுளத்து மலையை உலர் களமாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த பகுதியில் நெல் உலர் களம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புளியங்குடி:  புளியங்குடியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். நேற்றும் பகல் முழுவதும்  வெயிலின் உக்கிரம் அதிகரித்திருந்தது. மாலையில் திடீரென வானில் கருமேகம் சூழ்ந்தது. மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 7 மணி வரை இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தெருக்கள் எங்கும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. பகல் முழுவதும் அடித்த வெயிலின் காரணமாக கடும் வெப்பம் நிலவிய நிலையில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் சற்றுநிம்மதியடைந்தனர்.

தென்காசி: தென்காசி, குற்றாலம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மாலையில் சற்று இதமான சூழல் நிலவுகிறது. திடீரென மேகக் கூட்டம் திரண்டு மழையும் பெய்கிறது. கடந்த 2 தினங்களாக மாலையில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.  குற்றாலம் மெயினருவியில் சில தினங்களாக தண்ணீர் வறண்ட நிலையில் நேற்றிரவு லேசாக பாறையை ஒட்டி தண்ணீர் விழத்துவங்கியது.

Tags : harvesting ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...