×

பேட்டை ஐடிஐயில் தொழிற் பழகுநர் பயிற்சி முகாம் துறை ரீதியாக நன்கு அறிந்து கொண்டால் போட்டி உலகில் இலக்கை வென்றிடலாம்

பேட்டை, மார்ச் 5: துறை ரீதியான அனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டால் தான் போட்டி உலகில் இலக்கை வென்றிட முடியும் என்று பேட்டை ஐடிஐயில் நடந்த தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாமில் கலெக்டர் பேசினார். நெல்லை பேட்டை அரசு ஐடிஐயில் தமிழக அரசு வேலைவாய்ப்பு பயிற்சி துறை மற்றும் இந்திய அரசு மண்டல திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இயக்குநரகம், திறன் மேம்பாடு தொழில் முனைவு அமைச்சகம் இணைந்து நடத்திய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடந்தது. நெல்லை மண்டல தொழிற்பயிற்சி இணை இயக்குநர் ராஜகுமார் தலைமை வகித்தார். பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி துணை இயக்குநர் செல்வகுமார் வரவேற்றார்.  தூத்துக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் பழனி வாழ்த்தினார். முகாமில் கூடங்குளம் அணுமின் நிலைய மகேந்திரகிரி, இஸ்ரோ ஆல் இந்தியா ரேடியோ, கல்பாக்கம் அனல்மின் நிலையம், ஸ்பிக் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தகுதியான 500க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பங்கேற்று தேர்வான மாணவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி சேர்க்கை சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், திறமையான உழைப்பாளிகளையும் இளைஞர்களையும் அதிகளவு கொண்டதில் தமிழகம் முன்னோடி மாநிலம் ஆகும்.

தமிழகத்தில் தான் தொழில் தொடங்க ஏற்ற வகையில் ரயில்வே, கப்பல், விமானம், சாலை போக்குவரத்து, பிராட்பேண்ட் சேவை உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை பெற்று விளங்குகிறது. எனவே தான் வெளிநாட்டு தொழிலதிபர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தொழில் போட்டி நிலவி வருகிறது.

அதனை சமாளிக்கும் வகையில் நாம் எந்த துறையை தேர்வு செய்கிறோமோ அந்த துறையில் கூடுதலாக திறமைகளை கற்று கொள்ளும் விதத்தில் தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும். துறை ரீதியான அனைத்தையும் நன்கு தெரிந்து கொண்டால் தான் போட்டி உலகில் இலக்கை வென்றிட முடியும் என்றார். கன்னியாகுமரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஜார்ஜ் பிராங்கிளின் நன்றி கூறினார்.

Tags : world ,field ,Veterans Training Camp ,
× RELATED சில்லி பாயின்ட்…