×

பொதுமக்கள் எதிர்ப்பு திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன தரமற்ற மீன்கள் கண்டறிந்து அகற்றம்

திருச்சி, மார்ச் 5: திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன்வளத்துணை இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன, தரமற்ற மீன்களை கண்டறிந்து அகற்றினர். திருச்சி புத்தூர் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் கடைகளில் கடல் மற்றும் உள்நாட்டு நீர் நிலைகளில் பிடிக்கப்படும் மீன்கள் விற்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள பிற மாவட்டங்களிலிருந்து கடல் மீன்கள் பதப்படுத்தப்பட்டு, கொண்டுவரப்படும் மீன்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள மீன் கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன்களின் தரம் குறித்து திருச்சி மண்டல மீன்வள துணை இயக்குநர் ஷர்மிளா தலைமையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வின்போது மீன்கள் விற்பனை செய்யும் கடைகளில் கெட்டுப்போன நிலையில் தரமற்ற மீன்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் விற்பனைக்கு தகுதியற்ற மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அகற்றினர். நல்ல தரமான மீனின் செவுள் பகுதி சிவப்பு நிறமாகவும், மீனின் கண்கள் பளபளப்பாகவும் காணப்படும். கெட்டுப்போன மீன்களின் செவுள் நிறமற்றதாகவும், உடல் பகுதி பளபளப்பின்றி செதில்கள் உதிரும் நிலையிலும், துர்நாற்றமுடையதாகவும் காணப்படும். தரமற்ற மீன்களை விற்பனை செய்யக்கூடாது. தரமான மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும். மீன் கடைகளை சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும் எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கெட்டுப்போன மீன்களை உண்பதால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் என பொதுமக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags : Trichy Budhur Fish Market ,
× RELATED தமிழகத்தில் நோய் அறிகுறியை...