×

7ம் தேதி நடக்கிறது மாசி மகத்திருவிழாவையொட்டி நாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

திருச்சி, மார்ச் 5: திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம், நந்தி கோயில் தெருவில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் மாசி மகத் திருவிழாவின் 6ம் நாளான நேற்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகில் நந்தி கோயில் தெருவில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை நாகநாதசுவாமி கோயிலில் மாசிமகத் திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் சுவாமி, அம்பாள் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. இதில் 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டுடன் 63 மூவர் இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து 6ம் நாளான நேற்று காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோயிலில் சுவாமி, (நாகநாதர்-ஆனந்தவல்லி) அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 10 மணியளவில் சுவாமி, அம்பாள், நந்தி, சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 7ம் நாளான இன்று இரவு சுவாமி, அம்பாள் யானை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். இதையடுத்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 8ம் தேதி மாசி மகம் நடராஜர் தரிசனம், சிவகங்கை தீர்த்தம் கொடுத்தல், காலை 11 மணிக்கு காவிரியில் தீர்த்தவாரி, இரவு கொடி இறக்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : pilgrimage ,festival ,Naganatha Swamy Temple ,Maasi Mahathiru ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு