×

தேனி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் நடவடிக்கை தேனி எஸ்.பி எச்சரிக்கை

தேனி, மார்ச் 5: தேனி மாவட்டத்தில் ஆட்சேபனைக்குரிய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி போலீஸ் எஸ்.பி சாய்சரன்தேஜஸ்வி எச்சரித்துள்ளார். தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட எதிர்கட்சிகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இச்சட்டத்தை ஆதரித்து பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளும் ஆர்ப்பாட்டம், பேரணியில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று மாலை தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய்சரண்தேஜஸ்வி ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், தெருமுனைப்பிரசாரம், பொதுமக்களின் பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அமைப்புகள் நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற ஆட்சேபிக்கப்படாத நிகழ்வுகளுக்கு அந்தந்த காவல்நிலையங்களில் கோரப்படும் விண்ணப்பங்கள் தேனி, போடி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டு தகுந்த நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்ட இடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், ஒவ்வொரு காவல் உட்கோட்டங்களிலும் சட்டப்பிரிவு 30(2) காவல் சட்டம் 1861ன் கீழ் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆணை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சட்ட விதிகளுக்குட்பட்டு எந்த ஒரு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சி நடத்தப்படும் 7 நாட்களுக்கு முன்னதாக அந்தந்த காவல்நிலையங்களில் விண்ணப்பித்து முறையான அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும். முறையாக காவல்துறை அனுமதி பெறாத நிகழ்ச்சிகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண்தேஜஸ்வி எச்சரித்துள்ளார்.

Tags : Theni SP ,protests ,district ,Theni ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...