×

சீதளிகுளத்தின் நடைபாதையை சீரமைக்க வேண்டும் பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருப்புத்தூர், மார்ச் 5: திருப்புத்தூர் திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலின் தெப்பக்குளமான சீதளிகுளத்தை சுற்றியுள்ள நடைபாதை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் நகரின் மையத்தில் உள்ளது சீதளி தெப்பக்குளம். ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, திருத்தளிநாதர் கோயிலின் தெப்பக்குளம் மிகவும் பழமையான வரலாறு மற்றும் புராண சிறப்பு பெற்றது. இக்குளம் காசி, ராமேஸ்வரத்திற்கு இணையாக கருதப்படுகிறது. இக்குளம் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. குளத்தின் கரைகள் நவீனப்படுத்தப்பட்டு தூர்வாரப்பட்டது.

மேலும் குளத்தைச் சுற்றிலும் டைல்ஸ்கள் பொருத்தப்பட்டு நடை பாதையும் அமைக்கப்பட்டது. குளத்தின் வெளிப்புற கரையைச் சுற்றிலும் இரவிலும்,
அதிகாலையிலும் பலர் திறந்த வெளிக்கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். மேலும் குளத்தின் படிக்கட்டு மற்றும் நடைபாதையில் இரவில் திறந்தவெளி பாராகவும் சிலர் பயன்படுத்தி விட்டு, பாட்டில்களை படிக்கட்டில் போடுகின்றனர். மேலும் நடைபாதைக்காக போடப்பட்ட பேவர் பிளாக் கற்கள் அனைத்தும் பெயர்ந்து சேதமடைந்துவிட்டது. இதனால் தற்போது இந்த நடைபாதையில் யாரும் நடைபயிற்சி செய்வது கிடையாது.

மேலும் தற்போது குளத்தில் தண்ணீர் கிடப்பதால் அதில் குழிப்பதற்காக வருபவர்கள் கால்களில் பாட்டில்கள் குத்தி காயப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம், இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படாமல் தடுக்கவும், சேதமடைந்துள்ள நடைபாதையை சீரமைக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரியுள்ளனர்.

Tags : Devotees ,corridor ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...