×

செவித்திறன் குறை இருந்தால் பரிசோதனை செய்வது அவசியம்

அரியலூர், மார்ச் 5: அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவித்திறன் நாளையொட்டி 4 பேருக்கு காது கேட்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கருவிகளை வழங்கி கலெக்டர் ரத்னா பேசியதாவது: அரியலூர் மாவட்டத்தில் தேசிய செவித்திறன் தின விழிப்புணர்வு பிரசாரமானது வரும் 16ம் தேதி வரை நடக்கிறது. காது கேளாமை பற்றிய விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செவித்திறன் தினம் கொண்டாடப்படுகிறது. இதைதொடர்ந்து அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் செவித்திறனுடைய நபர்களுக்கு பரிசோதனை செய்தும், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை அறிந்து அவர்களுக்கும் காது கேட்கும் கருவிகள் வழங்கப்படவுள்ளது.

குழந்தை பிறப்பின்போது ஏற்படும் சிக்கல், குறிப்பிட்ட சில தொற்று நோய்கள், காதுகளில் ஏற்படும் நோய்கள் மருந்துகளால் மற்றும் அதிக ஒலியால், முதுமையால் செவித்திறன் பாதிப்படைதலை உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பதன் மூலமாகவும், மருத்துவ சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்தலாம். சிறு வயதிலேயே இக்குறையை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டும். காது கேளாமை எனும் சந்தேகம் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அதை கண்டறியும் பரிசோதனைகள் செய்து உரிய சிகிச்சையை பெறுதல்வேண்டும். நாட்டின் கேட்கும் திறனை வளப்படுத்தி நம் நாட்டை செவித்திறன் கேளாமை கோளாறுகளில் இருந்து விடுவிப்போம் என்றார். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் மரு.முத்துகிருஷ்ணன், தலைமை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மண்டல மருத்துவ அலுவலர் ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர். முன்னதாக உலக செவித்திறன் நாளையொட்டி விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் தலைமையில் அனைவரும் ஏற்று கொண்டனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது