×

கொரோனா வைரஸ் தாக்குதல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் காரைக்கால் கலெக்டர் உத்தரவு

காரைக்கால், மார்ச் 5: கொரோனா வைரஸ் குறித்து, முன்னெச்சரிக்கையாக, காரைக்கால் மாவட்டத்திற்கு, வெளிநாட்டிலிருந்து வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். என, மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா நலவழித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமையில், காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ், அரசு பொது மருத்துவமனை உள்ளிருப்பு அதிகாரி டாக்டர் மதன்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, நோய் தடுப்பு அதிகாரிகளிடம் கலெக்டர் அர்ஜூன் சர்மா விவாதித்தார்.

பின்னர், கலெக்டர் அர்ஜூன் சர்மா பேசியதாவது: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மிக அவசியம். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் உத்தவுகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும். தேவையான மருந்து மாத்திரைகள், தடுப்பு உபகரணங்களையும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக, வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், காரைக்காலில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லையென்பதை நலவழித்துறை துணை இயக்குனர் கூறியுள்ளார். இருந்தாலும், அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் கூறியது: காரைக்காலுக்கு சீனாவிலிருந்து வருகை தந்த 10 நபர்கள் தீவிர கண்காணிப்பில் வைத்து கண்காணித்ததில், யாருக்கும் அந்த பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். மேலும், காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு வந்த சுமார் 108 பேரை தீவிரமாக கண்காணித்து, அவர்களுக்கும் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். மத்திய ஏர்போர்ட் அதிகாரிகளிடமிருந்து வரும் தகவலையடுத்து, காரைக்காலுக்கு வரும் வெளிநாட்டு நபர்களை கலெக்டர் கூறியது போல் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மாவட்ட அரசு பொது மருத்துவமனையில், தேவையான மருந்து, மாத்திரை, தடுப்பு உபகரணங்கள், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளது. தற்போது பொதுமக்களுக்கு இது குறித்து ஏந்தவித விழிப்புணர்வும் தேவையில்லை. அது வீனாக பதற்றத்தை ஏற்படுத்தும். மத்திய அரசு உத்தரவுக்கு இணங்க சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். பொதுமக்கள் யாரும் இது குறித்து எந்தவித அச்சமும் கொள்ளதேவையில்லை. என்றார்.

Tags : Karaikal Collector ,arrival ,foreigners ,
× RELATED சேலத்தில் குழந்தைகளைக் கடத்த 400...