×

அனுமந்தபுரம் ஊராட்சியில் மயானத்தை சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர், மார்ச் 5: அனுமந்தபுரம் ஊராட்சியில் உள்ள மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம் அனுமந்தபுரம் ஊராட்சி, ஜிஎஸ்டி சாலைக்கு செல்லும் வழியில் சிங்கபெருமாள் கோயில் அருகே அமைந்துள்ளது. இந்த ஊரில் புகழ்பெற்ற அகோர வீரபத்திர சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த ஊரில் சுமார் 600 வீடுகள் அமைந்துள்ளன. இவற்றில், 3000 பேர் வசிக்கின்றனர்.
அனுமந்தபுரம் கிராமத்தின் மயானம் வயல்வெளிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் போதிய வருவாய் இல்லாததால் சாலை, மயானப்பாதை, மதிற்சுவர், தடையில்லாத குடிநீர் என எவ்வித உள்கட்டமைப்பு பணிகள் இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக கிராமத்தில் வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் குப்பைகள் மயானத்தில் கொட்டப்படுகிறது. இதனால், மயானத்தின் ஒரு பகுதி பிளாஸ்டிக் குப்பைகளால் நிரம்பிக் காணப்படுகிறது. தகன மேடைக்கு சடலங்களை கொண்டு செல்ல முடியாத அளவுக்கு புதர் செடிகள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. இதையொட்டி, சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ கொண்டு செல்லும்போது சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மோசமான காற்றை சுவாசிக்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் மயானத்தின் பரப்பளவு சுருங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் அனுமந்தபுரம் கிராமத்தின் மயானத்தில் உள்ள குப்பைகள், புதர்களை அகற்றி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மயானத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anantapuram Panchayat ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி...