×

விவசாயிகளின் அலைச்சலை குறைக்க மானாம்பதி கிராமத்தில் வேளாண் விரிவாக்க மையம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருப்போரூர், மார்ச் 5: திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதியில்  வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. மானாம்பதி மற்றும்  சுற்றுப்புறத்தைச் சேர்ந்த சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்,  தங்களுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து, விதை நெல், மணிலா பயிர்  ஆகியவற்றை வாங்கி பயன்படுத்தி வந்தனர். மேலும், வேளாண் அதிகாரிகளிடம்  விவசாய ஆலோசனைகளையும் பெற்று வந்தனர். இந்நிலையில் இந்த வேளாண் விரிவாக்க  மையக் கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், கட்டிடம்  இடியும் நிலையில் ஆனது. இதனால் இக்கட்டிடத்தில் இடு பொருள்கள்,  உரம், விதை நெல் ஆகியவை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் விரிவாக்க மையம் மூடப்பட்டது.  

இதையடுத்து, சில  ஆண்டுகள் வரை அங்கு வந்து விவசாயிகள் கேட்கும் பொருட்களுக்கு ஒரு சீட்டு  வழங்கப்பட்டு அந்த சீட்டை எடுத்துச் சென்று திருப்போரூர் வேளாண்மை  அலுவலகத்தில் கொடுத்து விவசாயிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்  கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளும் வேறு வழியின்றி வண்டி வாடகை கொடுத்து, செலவு செய்து உரம், பூச்சி மருந்து, விதை நெல், மணிலா பயிர் ஆகியவற்றை  வாங்கி பயன்படுத்தினர்.

இந்நிலையில் இங்கு வந்து கொண்டிருந்த வேளாண்மை  விரிவாக்க அலுவலரும் கட்டிடத்தின் மோசமான நிலையை காரணம் காட்டி கடந்த 2 ஆண்டுகளாக மானாம்பதி மையத்துக்கு வருவதில்லை. இதனால்,  சுற்றிலும் கிராமங்கள் நிறைந்த மானாம்பதியில், தற்போது வேளாண்மை விரிவாக்க  மையம் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், விவசாயத்தை மட்டுமே  தொழிலாக கொண்ட விவசாயிகள் தங்களின் அனைத்து வேளாண் தேவைகளுக்கும்  திருப்போரூர் சென்று நிவாரணம் பெறுகின்றனர். இதனால் கூடுதல் செலவினம்  ஏற்படுவதோடு கால விரயமும் உண்டாகிறது. எனவே, மானாம்பதியில் செயல்பட்டு வந்த  வேளாண் விரிவாக்க மையத்தை தற்காலிகமாக மீண்டும் தனியார் கட்டிடத்திலோ  அல்லது மானாம்பதி ஊராட்சி சமூக கூடத்திலோ செயல்படுத்த வேண்டும்.  சேதமடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர  வேண்டும் என மானாம்பதி மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Agricultural Extension Center ,Manampathi Village ,
× RELATED பழநி அருகே நெல் வயல்களில் வேளாண்துறையினர் ஆய்வு