×

மதுராந்தகம் - செய்யூர் இடையே எண்டத்தூர், அரியனூர் வழியாக மதிய நேரத்தில் இயக்கிய டவுன் பஸ் திடீர் நிறுத்தம்: கிராம மக்கள் கடும் அவதி

செய்யூர்,  மார்ச் 5: மதுராந்தகம் செய்யூர் இடையே இயக்கப்படும் அரசு பஸ் மதிய நேரத்தில் இயக்குவதை திடீரென நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிறுத்திய பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மதுராந்தகம் பணிமனையில் இருந்து ஜமீன் எண்டத்தூர், கல்பட்டு, அரியனூர், அம்மனூர் வழியாக செய்யூர் வரையில் அரசு பஸ் (தஎ டி6) இயக்கப்படுகிறது. காலை 5 மற்றும் 8 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி என 4 வேளைகளில் இந்த பஸ், இவ்வழி தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த பஸ் மூலம் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் பகல் 1 மணிக்கு இயக்கப்படும் இந்த பஸ் திடீரென எவ்வித அறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டது. கிராம மக்களும் ஒரு சில நாட்களில் பஸ் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தனர். 4 மாதங்களுக்கு மேலாகியும் பஸ் அந்நேரத்தில் வரவில்லை. அந்த தடத்தில் பஸ் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மதிய நேரங்களில் பஸ்கள் இல்லாததால் 5 கிமீ வரை நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
மேலும், விவசாயிகள் விவசாயத்துக்கு தேவையான உரம், விதைகளை மதுராந்தகம் நகருக்கு வந்து வாங்கி செல்ல, இந்த நேரத்தில் இயக்கிய பஸ் வசதியாக இருந்தது. இதனால், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்களின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி, மீண்டும் அதே தடத்தில் அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Town bus standoff ,Madurai - Cheyyur ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...