×

ஸ்மார்ட் சிட்டி பணிக்காக பழைய பஸ் நிலைய கடைகளுக்கு கெடு

திருப்பூர், மார்ச் 5: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை வரும் 8ம் தேதிக்குள் காலி செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் 100 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கான வாடகையை மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் கடை வாடகையை 100 சதவீதம் உயர்த்தி அறிவித்ததாக தெரிகிறது. இதை எதிர்த்து பழைய பஸ் நிலையத்தில் வாடகைக்கு கடை வைத்துள்ள 63 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனால் வாடகை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது.  இந்நிலையில் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் 50 சதவீத வாடகை கட்டண உயர்வை மாநகராட்சிக்கு செலுத்தவும், வருகிற 8ம் தேதி மாலை 5 மணிக்குள் இந்த கடைகளை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்கவும் ஐகோர்ட்டு கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வாடகை கட்டண உயர்வை செலுத்த 3 வார அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இது குறித்து அறிவிப்பு நோட்டீசு சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் 2 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சி உதவி ஆணையாளர் கண்ணன், உதவி ஆணையாளர் (வருவாய்) தங்கவேல்ராஜன் ஆகியோர் பழைய பஸ் நிலையம் சென்று அங்குள்ள கடைக்காரர்களிடம் வருகிற 8ம் தேதி மாலை 5 மணிக்குள் கடைகளை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்க அறிவுறுத்தினர். அங்கிருந்த கடைக்காரர்கள் தங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தற்காலிகமாக கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். வாடகை கட்டண உயர்வை நிலுவையில்லாமல் முழுமையாக செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : bus station stores ,Smart City ,
× RELATED தூத்துக்குடியில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி