×

விளை நிலங்களில் உயிர்வேலி அழித்து கம்பி வேலியால் பறப்பன, ஊர்வன இனங்களால் விளைபொருட்களுக்கு ஆபத்து

திருப்பூர், மார்ச். 5: விவசாய விளை நிலங்களில் உயிர்வேலிகளை அழித்து கம்பி வேலி அமைப்பதால் ஊர்வன, பறப்பன ஆகிய இனங்கள் சிறுக, சிறுக அழிவதோடு, தற்போது இருக்கக்கூடிய உயிரினங்கள் இயற்கை உணவு இன்றி விதைப்பு பொருட்களை அழிப்பதால் மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுவதாக இயற்கை ஆர்வலர் கவலை தெரிவித்துள்ளார்.இது குறித்து இயற்கை ஆர்வலர் சாமியப்பன் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த காலங்களில் விவசாய விளை நிலங்களில் கம்பி வேலி கிடையாது. பல்வேறு வகையான தாவரங்கள், மூலிகை செடிகளை கொண்டு உயர்வேலி அமைக்கப்பட்டது. எலி, பாம்பு, பறவை இனங்கள், உடும்பு. மயில்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வேலிப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு வகையான தாவரங்களின் இலைகள், காய், கனிகள், பூச்சி இனங்கள் ஆகியவற்றை உட்கொண்டதால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது விளைநிலங்களில் தாவரங்களால் ஆன உயிர்வேலிகளை அழித்து கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால், பல்வேறு வகையான உயிரினங்களுக்கு சாப்பிட பல்வேறு வகையான தாவரங்களால் ஆன உயிர்வேலி இல்லாததால் விளை நிலத்தில் உள்ள விதைப்பு பொருட்களை உணவாக உட்கொள்கிறது. இதனால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் இன்றி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், தமிழகத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் விவசாய விளை நிலங்கள் அழிந்து வருகின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வடமாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பால் நமது கலாசாரம் அழியும் நிலைக்கு தள்ளப்படுகிறது. திருப்பூர் சாய ஆலைகளால் நிலத்தடி நீர் காரத்தன்மை அடைந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாழாகிறது. எனவே அபாயகர தொழிற்சாலைகளை மூடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : fruit lands ,
× RELATED கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து...