×

அவிநாசியில் ரூ.32 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி,மார்ச். 5:  அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று ரூ. 32 லட்சத்து  34 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், மைசூர், கொள்ளேகால், சத்தியமங்கலம், தர்மபுரி, ஆத்தூர்,  பென்னாகரம், கிணத்துக்கடவு, கோபி, நம்பியூர், புளியம்பட்டி, குன்னத்தூர்,  அன்னூர், மேட்டூர், தஞ்சாவூர், பேராவூரணி ஆகிய பகுதிகளிலிருந்து 348  விவசாயிகள், 2321 பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தன.  இதில், டி.சி.எச். ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6000 முதல் ரூ.7040 வரையிலும், ஆர்.சி.எச். பிடிரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500 முதல் ரூ.5450 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2000 வரையிலும் ஏலம் போனது. இதில் கோவை, ஈரோடு பகுதியிலிருந்து 23 பருத்தி வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தைவிட நேற்று நடந்த ஏலத்தில் 1000 மூட்டைகள் வரத்து அதிகரித்து இருந்தது. டிசிஎச்.ரக பருத்தி விலையும் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2000 வரை பருத்தி விலை அதிகரித்து இருந்தது. இதில் மொத்தம் ரூ.32 லட்சத்து  34 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது என வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags : Cotton auction ,Avinashi ,
× RELATED கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு