×

முதல்வர் வருகையொட்டி அரசு மருத்துவமனையில் தூய்மை பணி தீவிரம்

திருப்பூர், மார்ச் 5: திருப்பூரில் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட வரும் முதல்வரின் வருகையையொட்டி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு, காசநோய் பிரிவு, பிரசவ வார்டு, உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி சிகிச்சைக்காகவும், சிகிச்சை பெற்று வருவோரை சந்திப்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இருப்பினும் இந்த மருத்துவமனை வளாகத்தில் ஆண்கள் வார்டு, மற்றும் பெண்கள் வார்டு பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசும். மேலும் இந்த மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை கூட அள்ளாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் திருப்பூருக்கென்று தனி மருத்துவ கல்லூரி வேண்டுமென்று பல ஆண்டுகளாக அனைத்து அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு சார்பில் திருப்பூரில் மருத்துவ கல்லூரி அமைவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கு அடிக்கல் நாட்டுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 15ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகிறார். இதனையொட்டி திருப்பூர் மாநகராட்சி சார்பில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்றிலிருந்து மருத்துவமனை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், திருப்பூரில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட முதல்வர் வருவதையொட்டி மாநகராட்சியினர் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் வருகையையொட்டி மட்டும் மருத்துவமனையை சுத்தம் செய்யாமல் அன்றாடம் பொதுமக்களின் நலனுக்காகவும் தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Government Hospital ,Chief Minister ,arrival ,
× RELATED அரசு மருத்துவமனையில் நாள்தோறும் உணவு