×

ஊட்டி அரசு கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

ஊட்டி,  மார்ச் 5:   உலக உடல் நலம் மற்றும் ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு  கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் 25 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள்  பேரணி நேற்று நடந்தது.  உலக உடல் நலம் மற்றும் ஆரோக்கிய தினம், உலக  மாசு கட்டுப்பாடு தினத்தை முன்னிட்டு ஊட்டி அரசு கல்லூரி தேசிய மாணவர் படை  மாணவர்கள் 25 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஊட்டியில்  நடந்தது. கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி  தலைமை வகித்தார். இதில் டவுன் டி.எஸ்.பி. சரவணன் கலந்து கொண்டு சைக்கிள்  பேரணியை துவக்கி வைத்தார். பின்னர்  டி.எஸ்.பி. சரவணன் பேசியதாவது:  இளைஞர்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். சத்துள்ள உணவுகளை  உட்கொள்வதுடன் நாள்தோறும் தவறாமல் உடல் பயிற்சி செய்து சுறுசுறுப்பாகவும்  ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும். தங்கள் சுற்றுப்புறங்களை  சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்து கொள்ள வேண்டும்.  தவறான பழக்க  வழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட  அனைவரிடமும் உடல் நலம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்,  என்றார்.   இதைத்தொடர்ந்து கல்லூரியில் துவங்கிய சைக்கிள் பேரணி  சேரிங்கிராஸ், ரயில் நிலையம், படகு இல்லம், பிங்கர்போஸ்ட், தலைக்குந்தா  சென்று அங்கிருந்து தமிழகம் சாலை, கலெக்டர் அலுவலகம் வழியாக சுமார் 10  கி.மீ. தூரம் சென்று மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற  மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்நிகழ்ச்சியில் உதவி  பேராசிரியர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Ooty ,Government College Students ,
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...