×

குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் கோபி பழைய மார்க்கெட் வளாகம்

ஈரோடு, மார்ச் 5: கோபி பழைய மார்க்கெட் வளாகத்தை இரவு நேரத்தில் குடிமகன்கள் ஆக்கிரமித்துக்கொள்வதால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கோபி நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய மார்க்கெட் வளாகம், புதிய மார்க்கெட் வளாகம் என இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. பழைய மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள் பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் இருப்பு வைப்பதற்காக வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மக்கள் நடமாட்டம் பழைய மார்க்கெட் வளாகத்தில் அதிகமாக இருப்பது இல்லை. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் குடிமகன்கள், மார்க்கெட் வளாகத்தை இரவு நேரத்தில் டாஸ்மாக் பாராக மாற்றிவிடுவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:கோபி காய்கறி மார்க்கெட் பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் செயல்பட்டு வருகிறது. பழைய மார்க்கெட் வளாகத்தில் குறிப்பாக ஆடு, கோழி வதை செய்யும் பகுதியில் அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு மதுபாட்டில்களை உடைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதேபோல், மார்க்கெட் வளாகத்தில் உள்ள கழிப்பறைகளிலும் மதுபாட்டில் ஆங்காங்கே கிடக்கின்றது. பெண்களுக்கான கழிப்பறையில் கூட மதுபாட்டில் கிடக்கிறது. குடிமகன்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சத்துடனேயே இருக்க வேண்டி உள்ளது. எனவே, இரவு நேரத்தில் மார்க்கெட் வளாகத்தில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இதேபோல், வியாபாரிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறை வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் பயன்படுத்த முடியாமல் உள்ளதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, புதிய கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.


Tags : Kobe Old Market ,
× RELATED பொருட்காட்சி திடல் வணிக வளாக கட்டுமான...